ஆத்தூர் நகராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு
ஆத்தூர் நகராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.
ஆத்தூர்:
ஆத்தூர் நகரசபை இயல்பு கூட்டம் தலைவர் நிர்மலா பபிதா தலைமையில் நடந்தது. ஆணையாளர் சுபாஷினி, துணைத்தலைவர் கவிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆத்தூர் நகரசபைக்கு சொந்தமான திருமண மண்டபம் சிதிலமடைந்து உள்ளது. இதனை ராசி விதைகள் நிறுவனம் சார்பில் அதன் நிர்வாக இயக்குனர் எம்.ராமசாமி ரூ.92 லட்சத்தில் அவரது சொந்த செலவில் புதுப்பித்து கொடுத்துள்ளார். அவருக்கு இந்த நகரசபை கூட்டத்தின் மூலம் நன்றியை தெரிவித்து கொள்வதாக தலைவர் நிர்மலா பபிதா கூறினார். இதற்கு அனைத்து கவுன்சிலர்களும் மேஜையை தட்டி ஆரவாரம் செய்தனர்.
தி.மு.க. கவுன்சிலர் தங்கவேல் பேசும் போது, எந்த கோரிக்கை வைத்தாலும் நகராட்சியில் செய்து தரப்படுகிறது. அதேபோல் தமிழக முதல்-அமைச்சரும் உடனே குறைகளை நிவர்த்தி செய்கிறார். ஆனால் எடப்பாடி பழனிசாமி, முதல்- அமைச்சரை குறை கூறுகிறார். இது கண்டிக்கத்தக்கது என்றார்.
அதற்கு பதில் அளித்து அ.தி.மு.க. கவுன்சிலர் உமாசங்கரி பேசினார். அப்போது, இது பொதுக்கூட்ட மேடை அல்ல. எனவே எடப்பாடி பழனிசாமி பற்றி பேச கூடாது என்று கூறிய அவர், பொதுமக்களின் கோரிக்கைகள் சிலவற்றை பேசிய பிறகு வெளிநடப்பு செய்தார். அவருடன் மேலும் 3 அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர். தி.மு.க. கவுன்சிலர் ஜீவா ஸ்டாலின், தன்னுடைய வார்டில் பழைய பஸ் நிலையம் பகுதியில் கழிப்பிடம் கட்ட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை மனுவாக கொடுத்து விட்டு வெளிநடப்பு செய்தார். கூட்டத்தில் 28 கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.