பறிமுதல் செய்த ரூ.3¾ கோடி நகைகள் ஏலம்
பைன் பியூச்சர் மோசடி வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.3¾ கோடி நகைகள் வருகிற 20-ந் தேதி ஏலம் விடப்படுகிறது.
பைன் பியூச்சர் மோசடி வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.3¾ கோடி நகைகள் வருகிற 20-ந் தேதி ஏலம் விடப்படுகிறது.
ரூ.3¾ கோடி நகைகள் பறிமுதல்
சென்னை பாலவாக்கத்தை சேர்ந்த செந்தில்குமார் (வயது 45), விவேக் (34) ஆகியோர் கோவையில் பைன் பியூச்சர் உள்பட பல்வேறு நிதி நிறுவனங்களை தொடங்கினர்.
இவர்கள் கவர்ச்சிகர அறிவிப்புகளை வெளியிட்டு முதலீட்டாளர்களிடம் பணத்தை பெற்று மோசடி செய்தனர். இது குறித்து கோவை பொருளாதார போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை கோவையில் உள்ள தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நல பாதுகாப்பு சிறப்பு கோர்ட்டில் (டான்பிட்) நடந்து வருகிறது.
இந்த வழக்கில் 8942.170 கிராம் எடை கொண்ட ரூ.3 கோடியே 87 லட்சத்து 32 ஆயிரத்து 370 மதிப்பிலான தங்கம், வைரம் மற்றும் வெள்ளிப்பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். அவற்றை ஏலம் விட முடிவு செய்யப்பட்டு உள்ளது.
அதன்படி வருகிற 20-ந் தேதி நண்பகல் 12 மணிக்கு மேல் கோவை கலெக்டர் அலுவலகத்தில் நகைகள் ஏலம் விடப்படு கிறது. அது தொடா்பான நிபந்தனைகள் கலெக்டர் அலுவலக தகவல் பலகையில் ஒட்டப்பட்டு உள்ளது.
முன்னதாக வரவேண்டும்
ஏலம் தொடங்குவதற்கு 2 மணி நேரத்துக்கு முன்னதாகவே வர வேண்டும். ஏலத்தில் ரூ.3 கோடியே 87 லட்சத்து 32 ஆயிரத்து 370 நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளதால் அனைத்து ஆபணங்களும் ஒரே ஏலமாகத்தான் விடப்படும்.
ஏலம் நடத்தும் அலுவலர் எந்த ஒரு குறிப்பிட்ட நபருக்கும் ஏலத்தில் கலந்துகொள்ள அனுமதி மறுக்கலாம். உயர்ந்தபட்ச தொகையை கோரிய ஏலதாரர்முழு தொகையையும் 20-ந் தேதியோ அல்லது 7 நாட்களுக்குள்ளோ தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் வரைவோைலயாக மாவட்ட வருவாய் அலுவலரிடம் செலுத்தி ஆபரணங்களை பெற்றுக் கொள்ளலாம்.
அவ்வாறு தொகையை செலுத்த தவறினால் குறிப்பிட்ட நபர் ஏற்கனவே செலுத்திய தொகைகள் முழுவதும் அரசுக்கு பறிமுதல் செய்யப்படும்.
2-வது உயர்ந்தபட்ச ஏலதாரருக்கு வாய்ப்பு அளிப்பது தொடர்பாக மாவட்ட வருவாய் அலுவலரின் முடிவே இறுதியானது என்று மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ் வெளியிட்டு உள்ளார்.