ரூ.30 ஆயிரம் கோடி விவகாரம்: நிதியமைச்சரை மாற்றியதற்கு ஆடியோ தான் காரணம் – ஜெயக்குமார் பேட்டி
"ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் எம்.பி. ஆக தொடர முடியாது; கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர் எப்படி எம்.பி., ஆக இருக்க முடியும் என அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பி உள்ளார்.
சென்னை,
தேனி எம்பி ரவீந்திரநாத்துக்கு எதிராக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் அதிமுக சார்பில் எம்.பி., சி.வி.சண்முகம் நேற்று மனு அளித்திருந்தார். தேனி எம்.பி., ஓ.பி.ரவீந்திரநாத் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர், அவரை அதிமுக எம்.பி என அங்கீகரிக்கக்கூடாது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எழுதிய கடிதத்தை மக்களவை சபாநாயகரிடம் சிவி சண்முகம் அளித்திருந்தார்.
இந்த நிலையில், இன்று சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,
ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் எம்.பி. ஆக தொடர முடியாது. கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர் எப்படி எம்.பி., ஆக இருக்க முடியும், அவர் எந்த கட்சியும் சாராதவர் என மக்களவையில் அறிவிக்க வேண்டும் என தெரிவித்தார்.
இதனிடையே, பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தமிழக அரசின் அமைச்சரவை மாற்றம் குறித்தும் விமர்சித்திருந்தார். அதாவது அவர் கூறுகையில், பழனிவேல் தியாகராஜனை துறை மாற்றி இருப்பது, நிச்சயமாக அவர் பேசிய ஆடியோ தான் காரணமாக இருக்கும்.
முதல்-அமைச்சர் ஸ்டாலின் மகனும், மருமகனும் ரூ.30 ஆயிரம் கோடி ஒரே வருடத்தில் குவித்து வைத்திருப்பதாக தியாகராஜன் கூறிய அந்த ஆடியோ உண்மை என்பதை, தற்போது முதலமைச்சரே உறுதி செய்து இருப்பதாகத் தான் இந்த அமைச்சரவை மாற்றம் என்று நமக்கு உணர்த்துகிறது.
இந்த ஆடியோ உண்மை என்றால் மத்திய அரசு இவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விவகாரத்தை சிபிஐ, அமலாக்கத்துறை, வருமானவரித்துறை விசாரணை செய்ய வேண்டும் என்று மத்திய அரசிடம் அதிமுக தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த விவகாரத்தில் நாங்கள் உண்மையை கண்டுபிடிக்காமல் விடமாட்டோம் என்று தெரிவித்துள்ளார்.