மாமல்லபுரம் அருகே ஆட்டோ-கார் மோதல்; பெண் உள்பட 2 பேர் பலி


மாமல்லபுரம் அருகே  ஆட்டோ-கார் மோதல்; பெண் உள்பட 2 பேர் பலி
x

ஷேர் ஆட்டோ மீது கார் மோதிய விபத்தில் பெண் உள்பட 2 பேர் பலியானார்கள். 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

செங்கல்பட்டு

கார் மோதியது

மாமல்லபுரம் அடுத்த தேவனேரி கிழக்கு கடற்கரை சாலையில் கோவளத்தில் இருந்து மாமல்லபுரம் நோக்கி ஷேர் ஆட்டோ ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது.

தேவனேரி பஸ் நிறுத்தம் அருகே பயணிகளை ஏற்றிச் செல்ல முயன்றபோது, புதுச்சேரி நோக்கி அதிவேகத்தில் சென்ற கார், ஷேர் ஆட்டோவின் பின்புறம் பயங்கரமாக மோதியது. இதில் ஆட்டோ தூக்கி வீசப்பட்டு அப்பளம்போல் நொறுங்கியது. காரின் முன்பகுதியும் சேதமடைந்தது.

2 பேர் பலி

இதில் ஆட்டோவில் பயணம் செய்த நேபாளம் நாட்டை சேர்ந்த சாம்பலால் (வயது 48), கல்பாக்கம் அடுத்த வாயலூரை சேர்ந்த உண்ணாமலை (54) என்ற பெண் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

பலியான சாம்பலால், மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தேவனேரியில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் தங்கி, காலாளியாக வேலை செய்து வந்தார். உண்ணாமலையின் கணவர் தேவனேரியில் உள்ள டாக்டர் ஒருவரது பண்ணை வீட்டு தோட்டத்தில் காவலாளியாக வேலை செய்கிறார். உண்ணாமலையும் அங்கு தங்கி தினந்தோறும் பூஞ்சேரி வாகன சோதனை சாவடி மையத்துக்கு சென்று அங்கு துப்புரவு பணியாளராக வேலை செய்து வந்தார்.

விபத்தில் உயிரிழந்த சாம்பலால், உண்ணாமலை இருவரது உடல்களும் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

2 பேர் படுகாயம்

மேலும் ஆட்டோவில் பயணம் செய்த 2 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து குறித்து மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன் மற்றும் போலீசார் விசாரித்து வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story