அஞ்சுகிராமம் கிராம நிர்வாக அலுவலகம் முன் ஆட்டோ டிரைவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி முற்றுகை போராட்டம்


அஞ்சுகிராமம் கிராம நிர்வாக அலுவலகம் முன் ஆட்டோ டிரைவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி   முற்றுகை போராட்டம்
x

அஞ்சுகிராமம் கிராம நிர்வாக அலுவலகம் முன்பு ஆட்டோ டிரைவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி முற்றுகை போராட்டம் நடத்தினர்.

கன்னியாகுமரி

அஞ்சுகிராமம்,:

அஞ்சுகிராமம் கிராம நிர்வாக அலுவலகம் முன்பு ஆட்டோ டிரைவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி முற்றுகை போராட்டம் நடத்தினர்.

பயணிகளை ஏற்றுவதில் தகராறு

அஞ்சுகிராமத்தில் அண்ணா ஆட்டோ தொழிற்சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தை சேர்ந்தவர்கள் தங்கள் ஆட்டோ ஸ்டாண்டில் இருந்து ஒவ்வொருவராக அஞ்சுகிராமம் பஸ் நிலையம் அருகில் வந்து பயணிகளை ஏற்றி செல்வது வழக்கம்.

இந்தநிலையில் வேறொரு சங்கத்தை சேர்ந்த சில ஆட்டோக்கள் அஞ்சுகிராமம் பஸ் நிலையம் முன்பு நின்று பயணிகளை ஏற்றி சென்றது. இதனால் அண்ணா தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்களுக்கு போதிய சவாரி கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.

சவாரி ஏற்றி செல்வது தொடர்பாக இரண்டு சங்கங்களுக்கும் பிரச்சினை ஏற்பட்டது. இதையடுத்து இரண்டு சங்கத்தினரையும் அஞ்சுகிராமம் போலீஸ் நிலையத்தில் அழைத்து சப்-இன்ஸ்பெக்டர் ஜெசி மேனகா தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் தீர்வு ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.

முற்றுகை போராட்டம்

இந்தநிலையில் அண்ணா தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்கள் தலைவர் கோபாலகிருஷ்ணன், செயலாளர் முருகேசன், பொருளாளர் வீரமணி ஆகியோர் தலைமையில் நேற்று மாலையில் அஞ்சுகிராமம் போலீஸ் நிலையம், பேரூராட்சி அலுவலகம், கிராம நிர்வாக அலுவலகங்களுக்கு சென்று கோரிக்கை மனு கொடுத்தனர். பின்னர் மாலை 5 மணியளவில் அஞ்சுகிராமம் கிராம நிர்வாக அலுவலக வளாகத்தில் தரையில் அமர்ந்து மெழுகுவர்த்தி ஏந்தி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து சங்க நிர்வாகிகள் கூறும் போது, 'எங்களுக்கு முறையான தீர்வு கிடைக்கவில்லை என்றால் குடும்பத்துடன் கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று குடும்ப அட்டைகள் உள்ளிட்ட அனைத்து அடையாள அட்டைகளையும் மாவட்ட கலெக்டரிடம் ஒப்படைக்கும் போராட்டம் நடத்துவோம்' என்றனர்.

பேச்சுவார்த்தை

போராட்டம் குறித்து தகவல் அறிந்த கன்னியாகுமரி போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜா, அஞ்சுகிராமம் சப்-இன்ஸ்பெக்டர் ஜெசி மேனகா, கிராம நிர்வாக அதிகாரி சுதன் மற்றும் போலீசார் ஆட்டோ டிரைவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது வருவாய்த்துறை மூலம் உரிய தீர்வு கண்ட பின் பஸ் நிலையம் முன்பு ஆட்டோ நிறுத்த வேண்டும் என்றும், அதுவரை பஸ் நிலையம் முன்பு எந்த சங்கமும் ஆட்டோக்களை நிறுத்தக் கூடாது என்றும் போலீசார் அறிவுறுத்தினர். இதனையடுத்து பஸ் நிலையம் அருகில் நின்ற ஆட்டோக்கள் அப்புறப்படுத்தப்பட்டன. அதன் பிறகு அண்ணா தொழிற்சங்க ஆட்டோ டிரைவர்கள் கலைந்து சென்றனர்.

இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story