ஆட்டோ டிரைவர்கள் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்டோ டிரைவர்கள் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரம்பலூரில், ஆட்டோ டிரைவர்கள் தொழிற்சங்கம் (சி.ஐ.டி.யூ.) சார்பில் புதிய பஸ் நிலையம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ரெங்கநாதன் தலைமை தாங்கினார். கோரிக்கைகளை விளக்கி மாவட்ட தலைவர் கிருஷ்ணகுமார் உள்பட பலர் பேசினார்கள். ஆர்ப்பாட்டம் குறித்து சங்க நிர்வாகிகள் கூறுகையில், ஏப்ரல் மாதம் 1-ந்தேதி முதல் அமலுக்கு வந்துள்ள புதிய மோட்டார் வாகன சட்டத்திற்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். கேரள மாநில அரசைப்போல் தமிழ்நாட்டிலும் ஆட்டோவிற்கு ஆப் சேவையை நலவாரியத்தின் மூலம் தொடங்க வேண்டும். ஆட்டோ தொழிலாளர்களுக்கு இ.எஸ்.ஐ. மருத்துவ காப்பீடு உருவாக்க வேண்டும். ஆன்லைனில் விதிக்கும் அபராத முறையை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது என்றனர்.