ஆட்டோ டிரைவர் மர்மச்சாவில் மனைவி கைது
திருவண்ணாமலை அருகே ஆட்டோ டிரைவர் மர்மச்சாவில் மனைவி ைகது செய்யப்பட்டார்.
திருவண்ணாமலை அருகே ஆட்டோ டிரைவர் மர்மச்சாவில் மனைவி ைகது செய்யப்பட்டார்.
ஆட்டோ டிரைவர்
திருவண்ணாமலை அருகே அய்யம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 46), ஆட்டோ டிரைவர். இவரது மனைவி மகாலட்சுமி (31). இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.
ரமேஷ் குடிப்பழக்கம் உள்ளவர் என்று கூறப்படுகிறது. இதனால் கணவன் - மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
கடந்த 2-ந் தேதி அதிகாலை ரமேஷ் முகத்தில் பலத்த காயங்களுடன் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில் திருவண்ணாமலை தாலுகா போலீசார் சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
மனைவி கைது
முதற்கட்ட விசாரணையின்போது கணவன் - மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக ஏற்பட்ட தகராறினால் மனவேதனை அடைந்த ரமேஷ் கட்டையால் தன்னைத்தானே முகத்தில் தாக்கி கொண்டதாக அவரது மனைவி தெரிவித்தார்.
பின்னர் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் மகாலட்சுமி மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனையடுத்து போலீசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது அடிக்கடி குடிபோதையில் ரமேஷ் வீட்டிற்கு வந்ததால் ஆத்திரமடைந்த மகாலட்சுமி கட்டையால் ரமேஷை தாக்கியதும், இதில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்பதும் தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் கொலை வழக்காக மாற்றி மகாலட்சுமியை இன்று கைது செய்தனர்.
இந்த சம்பவத்தினால் அய்யம்பாளையம் கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டது.