ஆட்டோ ஸ்டாண்டு அமைக்க அனுமதிக்க வேண்டும்; கலெக்டரிடம் டிரைவர்கள் மனு
நெல்லை சந்திப்பு பஸ்நிலையம் அருகில் ஆட்டோ ஸ்டாண்டு அமைக்க அனுமதிக்க வேண்டும் என்று கலெக்டரிடம், டிரைவர்கள் மனு வழங்கினர்
மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்
நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.
இந்து ஆட்டோ தொழிலாளர் முன்னணி சங்க மாவட்ட பொருளாளர் நம்பிராஜன் மற்றும் ஆட்டோ டிரைவர்கள் உள்ளிட்டவர்கள் கலெக்டரிடம் மனு வழங்கினர். அதில், ''நெல்லை சந்திப்பு பஸ்நிலையத்தில் கடந்த 35 ஆண்டுகளாக அம்பேத்கர் ஆட்டோ ஒட்டுனர் சங்கம் 25 உறுப்பினர்களுடன் செயல்பட்டு வருகிறது. பஸ்நிலைய சீரமைப்பு பணி கடந்த 5 ஆண்டுகளாக நடந்து வந்ததால் அங்கு ஆட்டோக்கள் நிறுத்துவதற்கு இடம் இல்லை. அதனால் வேறு இடங்களில் ஆட்டோக்களை நிறுத்தி இருந்தோம். தற்போது சந்திப்பு பஸ்நிலைய பணி முடிவடைந்ததும், பஸ்நிலையம் அருகிலேயே மீண்டும் ஆட்டோ ஸ்டாண்டு அமைக்க அனுமதிக்க வேண்டும்'' என்று கூறியிருந்தனர்.
கோவில் நிலம் ஆக்கிரமிப்பு
இந்து மக்கள் கட்சி மாநில துணைத்தலைவர் உடையார் கொடுத்த மனுவில், ''திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமான இடம் மேலப்பாளையம் அருகே உள்ளது. அங்கு சுமார் ரூ.5 கோடி மதிப்பிலான இடத்தை மேலப்பாளையத்தை சேர்ந்த ஒருவர் ஆக்கிரமித்து போலி ஆவணங்கள் தயார் செய்து விற்பனை செய்ய முயற்சிக்கிறார். எனவே இதனை தடுத்து ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும். கோவில் நிலத்தை ஆக்கிரமித்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று கூறி இருந்தார்.
புதிய மக்கள் தமிழ்தேச மாநில தலைவர் செந்தூர் மகாராஜன் உள்ளிட்டவர்கள் வழங்கிய மனுவில், ''ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு விழாவில் அமைச்சர் ராஜகண்ணப்பனை ஒருமையில் பேசி மிரட்டல் விடுத்த நவாஸ்கனி எம்.பி. மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும். அங்கு மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரனை தாக்கிய நபரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்'' என்று கூறி இருந்தார்.
அடிப்படை வசதிகள்
இதேபோன்று மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, விபத்து நிவாரண உதவித்தொகை, இலவச வீட்டுமனை பட்டா, பட்டா மாறுதல், வேலைவாய்ப்பு, குடிநீர், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை வலியுறுத்தி பொதுமக்கள் கோரிக்கை மனு வழங்கினர்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் செந்தில்குமார், உதவி கலெக்டர் (பயிற்சி) ஷிஜா மற்றும் துறைசார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.