ஆவடியில் பட்டப்பகலில் துணிகரம்: பெட்ரோல் நிலைய மேலாளரை தாக்கி ரூ.1½ லட்சம் கொள்ளை


ஆவடியில் பட்டப்பகலில் துணிகரம்: பெட்ரோல் நிலைய மேலாளரை தாக்கி ரூ.1½ லட்சம் கொள்ளை
x

ஆவடியில் பட்டப்பகலில் பெட்ரோல் நிலைய மேலாளரை தாக்கி ரூ.1½ லட்சத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்று விட்டனர்.

சென்னை

சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக்ராஜா (வயது 24). இவர், கடந்த 6 மாதமாக சென்னை புதுப்பேட்டையில் உள்ள தனியார் பெட்ரோல் நிலையத்தில் உதவி மேலாளராக பணியாற்றி வருகிறார்.

இவர்களுக்கு சொந்தமான மற்றொரு பெட்ரோல் நிலையம், ஆவடி வசந்தம் நகர் அருகே உள்ளது. வசந்தம் நகரில் உள்ள பெட்ரோல் நிலைய உதவி மேலாளர் விடுமுறையில் சென்றிருப்பதால் கடந்த 1-ந் தேதி முதல் கார்த்திக்ராஜா ஆவடி வசந்தம் நகர் பெட்ரோல் நிலையத்தில் உதவி மேலாளராக அங்கேயே தங்கி பணியாற்றி வருகிறார்.

நேற்று காலை கார்த்திக்ராஜா, பெட்ரோல் நிலையத்தில் வசூலான ரூ.1 லட்சத்து 54 ஆயிரத்து 34 பணத்தை எடுத்துக்கொண்டு வங்கியில் செலுத்துவதற்காக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதி வழியாக வரும்போது இவருக்கு பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் இருவர் திடீரென கார்த்திக்ராஜாவின் மோட்டார் சைக்கிளுக்கு முன்பாக சென்று அவரை வழிமறித்தனர்.

பின்னர் கார்த்திக்ராஜாவை செங்கலால் தாக்கினர். இதில் அவர் நிலைகுலைந்தார். பின்னர் அவரிடம் இருந்த ரூ.1 லட்சத்து 54 ஆயிரத்து 34 வைத்திருந்த பணப்பையை கொள்ளையடித்து சென்றுவிட்டனர். பட்டப்பகலில் நடந்த இந்த துணிகர கொள்ளை சம்பவம் குறித்து கார்த்திக்ராஜா கொடுத்த புகாரின்பேரில் ஆவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.


Next Story