ஆவணி மாத பிரதோஷம்: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி


ஆவணி மாத பிரதோஷம்: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி
x

ஆவணி மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

வத்திராயிருப்பு,

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில். இக்கோவிலுக்கு ஆவணி மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு வரும் செப்டம்பர் 8-ந் தேதி முதல் செப்டம்பர் 11-ந் தேதி வரை 4 நாட்களுக்கு பக்தர்கள் அனுமதி என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

பக்தர்கள் காலை 7 மணி முதல் மதியம் 12 மணிவரை மட்டுமே கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆவணி மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பிற மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதோஷம் மற்றும் பவுர்ணமி அன்று சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது. பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை, கோவில் நிர்வாகம் செய்து வருகிறது. வனப்பகுதியில் எளிதில் தீப்பற்றும் பொருட்களைக் கொண்டுச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் இரவு நேரங்களில் மலைப்பகுதியில் தங்குவதற்கு கோவில் நிர்வாகம் தடை விதித்துள்ளது.

மேலும், கோவிலுக்கு செல்லும் மலைப்பாதைகளில் உள்ள நீரோடை பகுதிகளில் பக்தர்கள் இறங்கி குளிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அனுமதி நாட்களில் மழை பெய்தால் பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்படும் எனவும் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. பக்தர்கள் தமிழக அரசின் கட்டுப்பாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.


Next Story