ஆவணி மூலத்திருவிழா: மீனாட்சி அம்மன் கோவிலில் சுந்தரேசுவரருக்கு இன்று பட்டாபிஷேகம்...!


ஆவணி மூலத்திருவிழா: மீனாட்சி அம்மன் கோவிலில் சுந்தரேசுவரருக்கு இன்று பட்டாபிஷேகம்...!
x

மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூலத்திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியாக சுந்தரேசுவரருக்கு பட்டாபிஷேகம் சூட்டும் வைபவம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவில் நடக்க இருக்கிறது.

மதுரை,

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆவணி மூலத்திருவிழா நடந்து வருகிறது. இதையொட்டி சிவபெருமானின் திருவிளையாடல்களை பக்தர்களுக்கு விளக்கும் வகையில் நாள்தோறும் சிறப்பு அலங்காரங்கள் நடந்து வருகின்றன.

நேற்று காலை பாணனுக்காக சென்று அங்கம் வெட்டிய லீலை நடந்தது. அப்போது கம்பத்தடி மண்டபத்தில் வாள், கேடயத்துடன் சுந்தரேசுவரரும், சிறப்பு அலங்காரத்தில் மீனாட்சி அம்மனும் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். அங்கு சுந்தரேசுவரர் வேடம் அணிந்து பட்டர் ஒருவர் கையில் கேடயம், வாளுடன் இந்த திருவிளையாடல் பற்றி நடித்து காண்பித்தார். இரவில் சுவாமி தங்க ரிஷப வாகனத்திலும், அம்மன் வெள்ளி ரிஷப வாகனத்திலும் எழுந்தருளி ஆவணி வீதிகளில் வலம் வந்தனர்.

இந்த நிலையில், ஆவணி மூலத்திருவிழாவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு சிகர நிகழ்ச்சியான சுந்தரேசுவரர் பட்டாபிஷேகம் சுவாமி சன்னதி ஆறுகால் பீடத்தில் நடக்கிறது. அப்போது, சுவாமிக்கு செங்கோல் கொடுத்து சிறப்பு பூஜைகள் நடைபெறும். பின்னர் சுவாமியிடம் இருந்து செங்கோலை பெற்று மீனாட்சி கோவில் தக்கார் கருமுத்து கண்ணன், சுவாமி சன்னதி 2-ம் பிரகாரத்தை வலம் வருவார். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.


Next Story