கேரளாவில் பறவை காய்ச்சல் எதிரொலி: கோழிப்பண்ணைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்
கேரளாவில் பறவை காய்ச்சல் நோய் உறுதி செய்யப்பட்டு இருப்பதன் எதிரொலியாக நாமக்கல் கோழிப்பண்ணைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
நாமக்கல்,
கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் கடந்த அக்டோபர் மாதம் பறவை காய்ச்சல் தாக்கம் உறுதி செய்யப்பட்டது. தற்போது மீண்டும் ஆலப்புழா மற்றும் கோட்டயம் மாவட்டங்களில் பறவை காய்ச்சல் தாக்கம் உறுதி செய்யப்பட்டு சுமார் 8 ஆயிரம் கோழி, வாத்துகள் அழிக்கப்பட்டு உள்ளன. நோய் தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் பறவை காய்ச்சல் தாக்கம் உறுதி செய்யப்பட்டதால் தமிழகத்தில் உள்ள கோழிப்பண்ணையாளர்கள் கலக்கம் அடைந்து உள்ளனர். இங்கிருந்து தினசரி சுமார் 1 கோடி முட்டைகள் மற்றும் அதிகளவில் கோழிகள் விற்பனைக்காக கேரள மாநிலத்திற்கு லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்படுகின்றன.
கோழிப்பண்ணையாளர்கள் கவலை
கேரளாவில் உறுதி செய்யப்பட்டுள்ள பறவை காய்ச்சலால் தமிழகத்தில் கோழிப்பண்ணை தொழில் பாதிக்கப்படும் என கோழிப்பண்ணையாளர்கள் கவலை அடைந்துள்ளனர். நாaமக்கல் மண்டலத்தில் 1,100-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ள நிலையில், நாமக்கல் பகுதியில் நிலவும் தட்பவெப்பநிலைக்கு பறவை காய்ச்சல் நோய் கிருமிகள் பரவ வாய்ப்பு இல்லை என வல்லுனர் குழு தெரிவித்து இருந்தாலும், நாமக்கல் மற்றும் சுற்றுவட்டாரங்களில் உள்ள கோழிப்பண்ணைகளில் முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை கோழிப்பண்ணையாளர்கள் தீவிரப்படுத்தி உள்ளனர்.
கிருமிநாசினி தெளித்தல்
குறிப்பாக கோழிகளுக்கு கிருமிநாசினி தெளித்தல் உள்ளிட்ட பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். கோழிப்பண்ணை வாசலில் பொட்டாசியம் பெர்மாங்கனேட் கரைசல் கலந்த தண்ணீர் வைப்பதற்கு கால்நடை பராமரிப்பு துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர். இதேபோல் பெரும்பாலான பண்ணைகளில் வெளியில் இருந்து வரும் வாகனங்களை கிருமிநாசினி தெளித்த பின்னரே பண்ணைக்குள் அனுமதிக்கின்றனர்.