அரசு பள்ளியில் விழிப்புணர்வு முகாம்: ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க வேண்டும்- மாணவ-மாணவிகளுக்கு, ஆணையாளர் அறிவுரை


அரசு பள்ளியில் விழிப்புணர்வு முகாம்:  ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க வேண்டும்- மாணவ-மாணவிகளுக்கு, ஆணையாளர் அறிவுரை
x

ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க வேண்டும் என்று அரசு பள்ளியில் நடந்த விழிப்புணர்வு முகாமில் மாணவ-மாணவிகளுக்கு, ஆணையாளர் அறிவுரை வழங்கினார்.

கோயம்புத்தூர்

வால்பாறை

ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க வேண்டும் என்று அரசு பள்ளியில் நடந்த விழிப்புணர்வு முகாமில் மாணவ-மாணவிகளுக்கு, ஆணையாளர் அறிவுரை வழங்கினார்.

விழிப்புணர்வு முகாம்

வால்பாறையில் நகராட்சி நிர்வாகம் சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக நகராட்சி நிர்வாகம், இந்தியன் வங்கி சார்பில் சிறுகுன்றா எஸ்டேட் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பிளாஸ்டிக் ஒழிப்பு, பிளாஸ்டிக் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு நகராட்சி ஆணையாளர் பாலு தலைமை தாங்கினார். நகராட்சி தலைவர் அழகுசுந்தரவள்ளி, இந்தியன் வங்கி மண்டல மேலாளர் சீனிவாசன், முதன்மை மேலாளர் பெனடிக்ட்கிறிஸ்டோதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியை வேலுமயில் வரவேற்றார்.

தவிர்க்க வேண்டும்

முகாமில் பள்ளி மாணவ-மாணவிகள் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நாடகம் நடத்தி காண்பித்தனர். பின்னர் விளக்கவுரையாற்றிய ஆணையாளர் பாலு கூறியதாவது:- பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்ப்பதை மாணவ பருவத்தில் இருந்தே கடைபிடிக்க வேண்டும். உங்கள் மூலம் மற்றவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். நாம் இப்போது பயன்படுத்தி வரும் ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பொருட்கள் அனைத்தும் பிளாஸ்டிக் பொருட்கள்தான். எனவே ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் அனைத்து பொருட்களையும் தவிர்க்க வேண்டும்.

காகித பென்சில்கள்

நீங்கள் இப்போது பயன்படுத்தி வரும் பால்பாயின்ட் பேனாக்கள் அனைத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் கலந்தவை. எனவே இனிமேல் அந்த வகையான பேனாக்களை பயன்படுத்துவதை தவிர்த்து ஆண்டு முழுவதும் பயன்படுத்தும் தன்மை கொண்ட மை ஊற்றி எழுதும் பேனாக்களையே பயன்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் ரூ.15 ஆயிரம் மதிப்பில் இந்தியன் வங்கி சார்பில் மை ஊற்றி எழுதும் பேனாக்கள், பேப்பர் கூல் மூலமாக தயாரிக்கப்பட்ட காகித பென்சில்கள் மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்பட்டது. முகாமில் வால்பாறை இந்தியன் வங்கி கிளை மேலாளர் கோகுலகிருஷ்ணன், துணை மேலாளர் காளியப்பன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.


Next Story