13 முதல் 18 வயதிற்கு உட்பட்டவர்கள்பெண் குழந்தைகளுக்கானவிருதுக்கு விண்ணப்பிக்கலாம்
கிருஷ்ணகிரி:
பெண் குழந்தைகளுக்கான மாநில விருதுக்கு 13 முதல் 18 வயதிற்கு உட்பட்ட பெண் குழந்தைகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பிக்க அடுத்த மாதம் 5-ந் தேதி கடைசிநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட் கலெக்டர் சரயு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மாநில விருது
தமிழக அரசு, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலமாக பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கவும், அனைத்து பெண் குழந்தைகளும் 18 வயது வரை கல்வி கற்றலை உறுதி செய்யவும், பெண் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்கவும், பெண் குழந்தை திருமணங்களை தடுக்கவும் பாடுபட்டு, வீரதீர செயல்புரிந்த 18 வயதிற்கு உட்பட்ட பெண் குழந்தைகளை சிறப்பிக்கும் விதமாக ஆண்டுதோறும் மாநில அளவிலான விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டு வருகிறது.
மாநிலத்தில் ஒவ்வொரு வருடமும் மேற்கண்டவற்றில் சிறந்து விளங்கும் ஒரு பெண் குழந்தை தேர்ந்தெடுக்கப்பட்டு, அந்த பெண் குழந்தைக்கு தேசிய பெண் குழந்தை தினமான ஜனவரி 24-ந் தேதியன்று பாராட்டு பத்திரமும், ரூ.1 லட்சத்திற்கான காசோலையும் வழங்கி சிறப்பிக்கப்பட்டு வருகிறது.
5-ந் தேதி வரை
அதன்படி 2023-24-ம் ஆண்டிற்கு பெண் குழந்தைகளுக்கான மாநில விருது வழங்க மேற்குறிப்பிட்டவாறு பெண் குழந்தைகள் முன்னேற்றத்திற்காக பாடுபட்ட, சாதனை புரிந்த 13 வயிற்கு மேல் 18 வயதிற்கு உட்பட்ட (2022ம் ஆண்டு டிசம்பர் 31-ந் தேதி படி) தகுதியான பெண் குழந்தைகளிடமிருந்து விண்ணப்பங்கள் வருகிறது. அடுத்த மாதம் (செப்டம்பர்) 5-ந் தேதி வரை வரவேற்கப்படுகிறது.
மேற்கண்ட விருதிற்கான விண்ணப்பங்களை முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட திட்ட அலுவலர், காவல் துறை மற்றும் குழந்தைகளுக்காக பணிபுரியும் சிறந்த தொண்டு நிறுவனங்கள் வாயிலாக உரிய கருத்துருவுடன் கிருஷ்ணகிரி மாவட்ட சமூக நல அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
குழந்தையின் பெயர், தாய், தந்தை முகவரி, ஆதார் எண், புகைப்படம் ஆகியவற்றுடன், குழந்தை ஆற்றி அசாதாரண வீர, தீர செயல் மற்றும் சாதனைகள் ஆகியவற்றின் ஒரு பக்கத்திற்கு மிகாத குறிப்பு மற்றும் அதற்கான ஆதாரங்கள் இணைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.