அதிக வருமான வரி செலுத்திய நடிகர் ரஜினிகாந்துக்கு விருது


அதிக வருமான வரி செலுத்திய நடிகர் ரஜினிகாந்துக்கு விருது
x

அதிக வருமான வரி செலுத்திய நடிகர் ரஜினிகாந்துக்கு தெலுங்கானா கவர்னர் தமிழிசை விருது வழங்கினார். இந்த விருதை அவரது மகள் ஐஸ்வர்யா பெற்றுக்கொண்டார்.

சென்னை,

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மண்டல வருமான வரித்துறை சார்பில், 163-வது வருமானவரி தின விழா சென்னையில் நேற்று நடந்தது. விழாவிற்கு வருமானவரி துறையின் மண்டல முதன்மை தலைமை கமிஷனர் ரவிசந்திரன் ராமசாமி தலைமை தாங்கினார்.

விழாவில் தனி நபர் வரி செலுத்துதல் பிரிவில், அதிகளவு வரி செலுத்திய நடிகர் ரஜினிகாந்த் உள்பட 4 பேருக்கு விருதுகளை, தெலுங்கானா மாநில கவர்னர் மற்றும் புதுச்சேரி துணை நிலை கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வழங்கினார்.

நடிகர் ரஜினிகாந்த் சார்பில், அவருடைய மகள் ஐஸ்வர்யா விருதை பெற்றார். இதேபோல, சிறப்பாக பணியாற்றிய வருமான வரி அதிகாரிகள் பலருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

விழாவில் கவர்னர் டாக்டர் தமிழிசை பேசியதாவது:-

நாட்டின் வளர்ச்சிக்கு வரி

வருமானவரித்துறையின் நோக்கம் நாட்டின் நலனே தவிர, வரி செலுத்துவோருக்கு சுமை ஏற்படுத்துவது அல்ல. நாம் செலுத்தும் வரி நாட்டின் வளர்ச்சிக்கானது. நாட்டின் குடிமக்கள் அனைவரும், தானாக முன் வந்து வரி செலுத்த வேண்டும். ஒவ்வொருவரும் நான் நேர்மையாக வரி செலுத்துகிறேன் என தலைநிமிர்ந்து, பெருமையுடன் சொல்ல வேண்டும். வரி வருவாய் நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியமான ஒன்று. வரி செலுத்துவதை மனமுவந்து செய்ய வேண்டும்.

நாட்டில் உள்ள மக்களுக்காக வரி செலுத்த வேண்டும். வரி செலுத்துவது தொடர்பாக, பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அதேநேரம் அனைவரும் வரி செலுத்தும் வகையில், அதற்கான தொழில்நுட்பத்தை எளிமைப்படுத்த வேண்டும்.

பிரதமரின் கனவு

வரி செலுத்துவோர் வரி செலுத்துவதற்கான அவகாச நீட்டிப்பை எதிர்பார்க்காமல், குறிப்பிட்ட அவகாசத்திற்குள் வரி செலுத்த வேண்டும். அதே போல கணக்கு தாக்கலையும் அவகாசத்திற்குள் செய்ய வேண்டும். வரும் 2025-ம் ஆண்டுக்குள், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, ரூ.400 லட்சம் கோடியாக உயர்த்த வேண்டும் என்ற, பிரதமரின் கனவை நிறைவேற்றும் வகையில், அனைவரும் அதற்கு பணி புரிய வேண்டும். அதற்கு கடுமையான இலக்குகளை நிர்ணயிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

சிறார் இல்லங்கள் மீது கவனம்

நிகழ்ச்சியில் சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி பேசியதாவது:

சட்டங்களை எளிமையாக்குவது காலத்தின் கட்டாயமாக உள்ளது. சாமானிய மக்களும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் சட்டங்கள் எளிமையாக்கப்பட்டால் நீதிமன்றங்களின் பணிகள் வெகுவாக குறையும். வருமான வரித்துறை சார்பில், கிராமப்புறங்களில் பின் தங்கிய பள்ளிகளை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். இதேபோல சிறார் நீதி சட்டத்தின் கீழ் குற்றங்கள் அதிகரித்து வருவதால் கண்காணிப்பு இல்லங்களில் உள்ள 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

ராஜஸ்தானில் வரி செலுத்துவோர் சிறார் இல்லங்களை தத்தெடுத்து அவற்றுக்கு தேவையான வசதிகளை செய்து தருகின்றனர். அதேபோல, தமிழகத்தில் உள்ள சிறார் இல்லங்களை மேம்படுத்த, வரி செலுத்துவோர் மற்றும் வருமானவரித் துறை முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் வருமானவரி புலனாய்வு துறையின் தலைமை இயக்குனர் சுனில் மாத்தூர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story