செங்கல்பட்டு மாவட்டத்தில் பயிர் விளைச்சல் போட்டியில் வெற்றி பெறும் விவசாயிகளுக்கு விருது
செங்கல்பட்டு மாவட்டத்தில் பயிர் விளைச்சல் போட்டியில் வெற்றி பெறும் விவசாயிகளுக்கு ரூ.5 லட்சம் பரிசுடன் விருது வழங்கப்படும் என்று செங்கல்பட்டு மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் எல்.சுரேஷ் தெரிவித்துள்ளார்.
நெல் உற்பத்தி திறன் விருது
செங்கல்பட்டு மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் சுரேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பயிர் விளைச்சல் போட்டியானது நெற்பயிரில் திருந்திய நெல் சாகுபடி முறையில் பயிர் செய்த விவசாயிகளுக்கு மாநில அளவில் நடத்தப்படுகிறது. இந்த போட்டியில் கூடுதல் விளைச்சல் பெறும் விவசாயி ஒருவருக்கு ரூ.5 லட்சம் மற்றும் ரூ.7 ஆயிரம் மதிப்பிலான பதக்கமும் நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தி திறன் விருது என்ற பெயரில் வழங்கப்படுகிறது. இந்த போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் விவசாயிகள் தங்கள் பகுதி வேளாண்மைத்துறை அலுவலர்களை அணுகி நுழைவு கட்டணமாக ரூ.150 செலுத்தி தங்களது சாகுபடி நில விவரங்கள் சிட்டா அடங்கல் போன்ற ஆவணங்களை அளித்து பதிவு செய்து கொள்ளவும்.
மேலும், மாநில அளவிலான பயிர் விளைச்சல் போட்டியில் மணிலா மற்றும் உளுந்து பயிரிடும் விவசாயிகளுக்காக நடைபெறவுள்ளது. மணிலா பயிரில் கூடுதல் மகசூல் பெறும் விவசாயிகளுக்கு முதல் பரிசாக ரூ.25 ஆயிரமும், 2-வது பரிசாக ரூ.15 ஆயிரமும் வழங்கப்படும். உளுந்து பயிரில் கூடுதல் மகசூல் பெறும் விவசாயிகளுக்கு முதல் பரிசாக ரூ.15 ஆயிரமும், 2-வது பரிசாக ரூ.10 ஆயிரமும் வழங்கப்படும்.
குத்தகைக்கு சாகுபடி
இந்த போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் விவசாயிகள் தங்கள் பகுதி வேளாண்மைத்துறை அலுவலர்களை அணுகி உரிய ஆவணங்களுடன் ரூ.100 நுழைவுக் கட்டணம் செலுத்தி பதிவு செய்து கொள்ளவும்.
செங்கல்பட்டு மாவட்ட அளவில் மணிலா பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கான பயிர் விளைச்சல் போட்டியில் கலந்துகெண்டு விவசாயிகள் உரிய ஆவணங்களுடன் ரூ.50 நுழைவுக்கட்டணம் செலுத்தி பதிவு செய்திடுமாறும், இந்த போட்டியில் கூடுதல் மகசூல் பெறும் விவசாயிகளுக்கு முதல் பரிசாக ரூ.15 ஆயிரமும், 2-வது பரிசாக ரூ.10 ஆயிரமும் வழங்கப்படும்.
மேற்கண்ட மாநில, மாவட்ட அளவிலான போட்டிகளில் குத்தகைக்கு சாகுபடி செய்யும் விவசாயிகளும் கலந்து கொள்ளலாம். மேலும் கூடுதல் விவரங்களுக்கு தங்கள் பகுதி வேளாண்மைத்துறை அலுவலர்களை அணுகி பயன் பெறுங்கள். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.