மருத்துவ துறையில் சிறப்பாக பணிபுரியும் அலுவலர்கள், செவிலியர்களுக்கு பரிசு


மருத்துவ துறையில் சிறப்பாக பணிபுரியும் அலுவலர்கள், செவிலியர்களுக்கு பரிசு
x
தினத்தந்தி 26 Oct 2022 7:45 PM GMT (Updated: 26 Oct 2022 7:45 PM GMT)

மருத்துவத் துறையில் சிறப்பாக பணியாற்றி வரும் அலுவலர்கள் மற்றும் செவிலியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் நினைவு பரிசை தர்மபுரி கலெக்டர் சாந்தி வழங்கினார்.

தர்மபுரி

மருத்துவத் துறையில் சிறப்பாக பணியாற்றி வரும் அலுவலர்கள் மற்றும் செவிலியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் நினைவு பரிசை தர்மபுரி கலெக்டர் சாந்தி வழங்கினார்.

பாராட்டு விழா

மக்கள் சேவையில் மருத்துவ துறையின் நூற்றாண்டு விழாவையொட்டி தர்மபுரி மாவட்டத்தில் மருத்துவ துறையில் சிறப்பாக சேவை ஆற்றிய சிறந்த அலுவலர்கள் மற்றும் செவிலியர்களுக்கு பாராட்டு விழா தர்மபுரி கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது.

கலெக்டர் சாந்தி தலைமை தாங்கி நூற்றாண்டு விழா ஜோதியை வரவேற்று மருத்துவத்துறையில் சிறப்பாக சேவை ஆற்றிய சிறந்த அலுவலர்கள் மற்றும் செவிலியர்களை பாராட்டி, சான்றிதழ்கள் மற்றும் நினைவு பரிசுகளை வழங்கினார்.

விழாவில் கலெக்டர் சாந்தி பேசியதாவது:-

தர்மபுரி மாவட்டம் வளர்ந்து வருகிற ஒரு சிறப்பான மாவட்டம். இந்த மாவட்டத்தில் பின்தங்கிய பகுதிகள், மலைப்பகுதிகளில் வாழும் மக்களுக்கு மருத்துவ சேவையை அளிப்பதற்காக அந்த கிராமங்களின் அருகிலேயே மருத்துவமனை கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்கு இலவசமாக மருத்துவ சிகிச்சை நமது தர்மபுரி மாவட்டத்தில் அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்திலேயே அதிக அளவில் தர்மபுரி மாவட்டத்தில்தான் அரசு மருத்துவமனைகளில் குழந்தை பிறப்பு உள்ளது பாராட்டுக்குரியது.

உயிர் காக்கும் சேவை

அந்த வகையில் தர்மபுரி மாவட்டத்தில் மருத்துவத்துறையினர் சிறப்பாக பணிபுரிந்து வருகிறார்கள். அத்தகைய உயிர்காக்கும் சேவையை மக்களுக்காக ஆற்றி வருகிற சுகாதாரத்துறைக்கு வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்து கொள்வதோடு, மேலும் சிறப்பாக சேவை புரிந்திட வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் பேசினார்.

தொடர்ந்து நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, சுகாதாரத்துறை அலுவலர்களுக்கு நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மருத்துவத்துறையை சார்ந்த 34 மருத்துவர்கள், அலுவலர்கள், பணியாளர்களுக்கு கலெக்டர் பரிசுகளை வழங்கினார்.

விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா, சுகாதார பணிகள் துணை இயக்குனர் சவுண்டம்மாள், அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் சிவக்குமார், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் சாந்தி, குடும்ப நல துணை இயக்குனர் மலர்விழி, காசநோய் மருத்துவப் பணிகள் துணை இயக்குனர் ராஜ்குமார், தொழுநோய் துணை இயக்குனர் புவனேஸ்வரி, தர்மபுரி அரசு மருத்துவமனை குழந்தைகள் நல தலைமை மருத்துவர் ரமேஷ்பாபு, அரூர் அரசு மருத்துவமனையின் முதன்மை மருத்துவ அலுவலர் ராஜேஷ் கண்ணா, மகப்பேறு தலைமை மருத்துவர் மலர்விழி, பாளையம்புதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் வாசுதேவன், தீர்த்தமலை அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் தொல்காப்பியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story