போக்சோ சட்டம் குறித்துபள்ளி மாணவிகளுக்கு விழிப்புணர்வு


போக்சோ சட்டம் குறித்துபள்ளி மாணவிகளுக்கு விழிப்புணர்வு
x

நாமக்கல் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் போக்சோ சட்டம் குறித்து மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

நாமக்கல்

போக்சோ சட்டம்

பரமத்திவேலூர் காவல் துறை உட்கோட்டத்திற்கு உட்பட்ட வேலூர், வேலூர் அனைத்து மகளிர் போலீஸ், ஜேடர்பாளையம், பரமத்தி, நல்லூர் மற்றும் வேலகவுண்டம்பட்டி உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் காவல்துறை சார்பில் பாலியல் வன்கொடுமை, போக்சோ சட்டம் உள்ளிட்ட பல்வேறு குற்றங்கள் சம்பந்தமான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. பரமத்திவேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கலையரசன் அறிவுரையின் பேரில் பள்ளி மாணவிகளிடையே தாங்கள் படிக்கும் பள்ளிகளில் உள்ள ஆசிரியர்கள், பணியாளர்கள் 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு செய்தால் அது குறித்தும், பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் மற்றும் அந்தந்த பகுதிகளில் அடையாளம் தெரியாத நபர்கள் சுற்றி திரிந்தால் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என மாணவிகளிடையே எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மேலும் மாணவிகளுக்கு தொந்தரவு கொடுப்பவர்கள் யாராக இருந்தாலும் எந்த விதமான தயக்கமும் இன்றி போலீசாருக்கு உடனடியாக தகவல் தெரிவித்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைக்கப்படும் எனவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேற்கண்ட பகுதிகளில் நடைபெற்ற நிகழ்ச்சியில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இந்திராணி, சுரேஷ்குமார், ரவிச்சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர்கள், தலைமையாசிரியர்கள், ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

பெற்றோர், மாணவிகளுக்கு விழிப்புணர்வு

இதேபோல் மொளசி போலீஸ் நிலையம் சார்பில் இறையமங்கலம் பகுதியில் பெற்றோருக்கு போக்சோ விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை சப்-இன்ஸ்பெக்டர் மோகனசுந்தரம், முதல் நிலை காவலர் கனகராஜ் மற்றும் போலீசார் நடத்தினர். இதில் இறையமங்கலம் பகுதியில் வசிக்கும் பெற்றோர்களுக்கு போக்சோ குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதேபோல் கொக்கராயன்பேட்டையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் போக்சோ குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

திருச்செங்கோடு போலீஸ் நிலையம் சார்பில் மகேந்திரா பள்ளியில் மாணவிகளுக்கு போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திருச்செங்கோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாரதி மோகன் பேசும்போது, பள்ளி செல்லும் போது வீட்டின் அருகிலோ, பஸ் நிறுத்தத்திலோ அல்லது பஸ்சில் செல்லும்போதோ யாராவது பாலியல் தொந்தரவு செய்தால் அவர் மீது புகார் தெரிவிக்க வேண்டும். மேலும் காவல்துறைக்கு உள்ள பிரத்தியேக தொலைபேசி எண் அல்லது 1091 என்ற எண்ணில் புகார் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும். பெண் குழந்தைகளின் பாதுகாப்பு கருதி அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் காவல்துறை எடுத்து வருகிறது.

புகார் அளிக்க வேண்டும்

எனவே மாணவிகள், பெண் குழந்தைகள் பயப்படாமல் சமூக விரோதிகள் குறித்தும், பாலியல் சீண்டல் செய்யும் நபர்கள் குறித்தும் புகார் அளிக்க வேண்டும் என்றார். இந்த நிகழ்ச்சியில் உதவி காவல் ஆய்வாளர்கள் மலர்விழி மற்றும் ரஞ்சித் குமார் உளவுத்துறை காவலர் சிவராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான மாணவிகள் கலந்து கொண்டு விழிப்புணர்வு பெற்றனர்.


Next Story