அரசு பஸ்களில் மாற்றுத்திறனாளிகள் இருக்கைகள் குறித்து விழிப்புணர்வு
நெல்லை புதிய பஸ் நிலையத்தில் அரசு பஸ்களில் மாற்றுத்திறனாளிகள் இருக்கைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
உலக மாற்றுத்திறனாளிகள் தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி தமிழ்நாடு அரசு பஸ்களில் உள்ள மாற்றுத்திறனாளிகள் இருக்கை குறித்து பஸ் பயணிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த நிகழ்ச்சி நெல்லை புதிய பஸ்நிலையத்தில் நேற்று நடந்தது.
இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலர் பிரம்மநாயகம் தலைமை தாங்கினார். நெல்லை உதவி கலெக்டர் (பயிற்சி) கோகுல் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பஸ் பயணிகளிடம், பஸ்சில் பயணம் செய்யும்போது மாற்றுத்திறனாளிகளின் இருக்கையில் அமராமல் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் அவர்களை அமரச் செய்ய வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசினார். நிகழ்ச்சியில் மேலப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் மற்றும் ஏராளமான மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை தமிழக மாற்றுத்திறனாளிகள் சட்ட பாதுகாப்பு சங்கம் செய்திருந்தது.