அழுகிய காய்கறிகள், குப்பைகளை கொட்டுவதை தவிர்க்க வேண்டும்


அழுகிய காய்கறிகள், குப்பைகளை கொட்டுவதை தவிர்க்க வேண்டும்
x

அழுகிய காய்கறிகள், குப்பைகளை கொட்டுவதை தவிர்க்க வேண்டும் என எம்.எல்.ஏ., மேயர் அறிவுறுத்தினர்.

வேலூர்

வேலூர் மாநகராட்சி 2-வது மண்டலத்துக்கு உட்பட்ட நேதாஜி மார்க்கெட்டில் ப.கார்த்திகேயன் எம்.எல்.ஏ., மேயர் சுஜாதா ஆகியோர் மாநகராட்சி அதிகாரிகளுடன் சென்று நேரில் ஆய்வு செய்தனர். மார்க்கெட்டிற்குள் வாகனங்கள் வந்து செல்லும் பகுதியில் அழுகிய காய்கறிகள், வாழைத்தார் உள்ளிட்டவை கொட்டப்பட்டு துர்நாற்றம் வீசியது. மேலும் மழையின் காரணமாக அந்த பகுதி சேறும், சகதியாக பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத நிலையில் காணப்பட்டது.

அவற்றை பார்வையிட்ட எம்.எல்.ஏ., மேயர் மார்க்கெட்டில் சேகரமாகும் அழுகிய காய்கறிகள், குப்பைகளை தினமும் சேகரிக்கும்படி மாநகராட்சி ஊழியர்களிடம் தெரிவித்தனர். மேலும் அங்குள்ள வியாபாரிகளிடம் அழுகிய காய்கறிகள், குப்பைகளை சாலையில் கொட்டுவதை தவிர்க்க வேண்டும். அவற்றை மாநகராட்சி ஊழியர்களிடம் கொடுக்கும்படி அறிவுறுத்தினர். நேதாஜி மார்க்கெட்டில் மழைநீர் தேங்கி சேறும், சகதியும் ஆகாத வகையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். அதையடுத்து அவர்கள் சாரதி மாளிகையில் ஆய்வு மேற்கொண்டு, அங்குள்ள கழிவறையை உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வரும்படி தெரிவித்தனர்.

ஆய்வின்போது 2-வது மண்டலக்குழு தலைவர் நரேந்திரன், உதவிகமிஷனர் சுதா, உதவிபொறியாளர் வெங்கடேசன், சுகாதார அலுவலர் லூர்துசாமி, அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாவட்ட தலைவர் ஞானவேலு, இளைஞரணி செயலாளர் அருண்பிரசாத் மற்றும் பலர் உடன் இருந்தனர்.


Next Story