காடுகளை பாதுகாப்பது குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு
அரசு பள்ளிகளில் நடந்த வன மகோத்சவ விழாவையொட்டி காடுகளை பாதுகாப்பது குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
பொள்ளாச்சி
அரசு பள்ளிகளில் நடந்த வன மகோத்சவ விழாவையொட்டி காடுகளை பாதுகாப்பது குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
கருத்தரங்கம்
பொள்ளாச்சி அருகே ஏரிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் வனமகோத்சவ விழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியை சுகந்தி தலைமை தாங்கி, காடுகளை பாதுகாப்பதன் அவசியம் குறித்து பேசினார். இதைத்தொடர்ந்து சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளர் ஆசிரியை கீதா 'காற்று என்ன விலை சார்' என்ற தலைப்பில் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடத்தினார். பின்னர் காடுகளை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் விழிப்புணர்வு பதாகைகளை மாணவர்கள் கையில் ஏந்தி சென்றனர்.
மூலிகை செடிகள்
அவர்கள் காடுகளை வளர்ப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து பாடல், கவிதைகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் காடுகள் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய காகித பென்சில் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. தொடர்ந்து மா, வாழை, கொய்யா, வேம்பு போன்ற பலவகை மரக்கன்றுகளையும், கற்பூரவள்ளி, துளசி, புதினா வல்லாரை ஆடாதோடா, பூனை மீசை போன்ற 15 வகையான மூலிகை செடிகளையும் தோட்டத்தில் மாணவர்கள் நட்டனர். விழாவில் ஆசிரியைகள் சுப்புலட்சுமி, சுசீலா, ராணி, சாஜிதா பானு, சரண்யா மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
பெத்தநாயக்கனூர்
பெத்தநாயக்கனூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் நடந்த வன மகோத்சவ விழாவில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பள்ளி வளாகத்தில் நடப்பட்டு உள்ள நாட்டு மரங்கள் குறித்து மாணவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
தொடர்ந்து இயற்கை குறித்த விழிப்புணர்வு பேரணியும், பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளும் நடப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை பள்ளியின் பசுமைபடை ஒருங்கிணைப்பாளர் பாலமுருகன் செய்திருந்தார்.