போதை பொருள் குறித்து பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு
போதை பொருள், பாலியல் வன்கொடுமை குறித்து பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமையில் நடந்தது.
விழிப்புணர்வு
திருத்தணி அடுத்த கே.ஜி.கண்டிகை அரசினர் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை சார்பாக 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவ, மாணவிகளிடையே சமுதாயத்தில் நிலவும் சிறுவர்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை, போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் குழந்தை திருமணம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படும் வகையில் கலந்துரையாடல் நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் ஆல்பீ ஜான் வர்கிஸ் தலைமையில் நடைபெற்றது.
கல்வியில் சிறந்து விளங்க வேண்டும்
நிகழ்ச்சியில் கலெக்டர் மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடி, ஆலோசனைகளை வழங்கி தெரிவித்ததாவது:-
பள்ளி மாணவர்கள் பல்வேறு போதைப் பழக்கங்களுக்கு ஆளாகி எதிர்கால வாழ்க்கையை தொலைக்கின்ற அளவுக்கு போதை பொருட்கள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே வளரும் பருவத்தில் மாணவர்கள் எந்தவித போதை பழக்கத்துக்கும் அடிமையாகாமல் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, போதைப்பழக்க வழக்கங்களின் தாக்கங்கள் குறித்து மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு விக்னேஷ் கூறும்போது மாணவர்களின் லட்சியம் கல்வியில் மட்டும் இருந்தால் சிறந்த பதவிகளுக்கு வர முடியும், குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க 1098 எண்ணுக்கு தொடர்பு கொள்ள வேண்டும் என மாணவ, மாணவர்களுக்கு எடுத்துரைத்து, விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமன், பள்ளி தலைமையாசிரியர், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மற்றும் மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.