காட்டுத்தீயை அணைப்பது குறித்த விழிப்புணர்வு முகாம்
வால்பாறையில் காட்டுத்தீயை அணைப்பது குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் பொள்ளாச்சி, திருப்பூர் கோட்ட வனத்துறையினர் பங்கேற்றனர்.
வால்பாறை
வால்பாறையில் காட்டுத்தீயை அணைப்பது குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் பொள்ளாச்சி, திருப்பூர் கோட்ட வனத்துறையினர் பங்கேற்றனர்.
விழிப்புணர்வு முகாம்
பொள்ளாச்சி மற்றும் திருப்பூர் கோட்ட வனத்துறையினருக்கும், மலைவாழ் மக்களுக்கும் காட்டுத்தீயை தடுப்பது குறித்து அட்டகட்டி வன மேலாண்மை பயிற்சி மையத்தில் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதற்கு உதவி வனப்பாதுகாவலர் செல்வம் தலைமை தாங்கினார். வனச்சரகர்கள் மணிகண்டன், வெங்கடேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், காட்டுத்தீ அபாயம் உள்ள வனப்பகுதிகளில் முன்கூட்டியே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது, மலைவாழ் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி காட்டுத்தீ தடுப்பு குழுக்கள் அமைப்பது, காாட்டுத்தீ ஏற்பட்டால் வனத்துறையினருக்கு உடனடியாக தகவல் தெரிவிப்பது போன்றவை குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
முதலுதவி சிகிச்சை
ஆழியாறு வனத்துறை சோதனைச்சாவடி வழியாக வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கி காட்டுத்தீயை தடுப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.
காட்டுத்தீயை அணைக்கும் பணியின்போது ஏற்படும் விபத்துகளில் சிக்குபவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பது குறித்து வால்பாறை அரசு ஆஸ்பத்திரி தலைமை டாக்டர் மகேஷ் ஆனந்தி செயல்விளக்கம் அளித்தார். காட்டுத்தீயை அணைக்கும் முறைகள் குறித்து தீயணைப்பு நிலைய அதிகாரி வேலுமணி விளக்கினார்.
இதில் பொள்ளாச்சி, திருப்பூர் கோட்ட வனவர்கள், வனக்காப்பாளர்கள், வனக்காவலர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் மற்றும் நெடுங்குன்று, கீழ் பூணாச்சி, வெள்ளிமுடி, காடம்பாறை, உடுமன்பாறை, சங்கரன்குடி, பரமன்கடவு ஆகிய மலைவாழ் கிராம மக்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை பயிற்சி மைய வனச்சரகர் பாஸ்கர், வனவர் வெள்ளிங்கிரி ஆகியோர் செய்திருந்தனர்.