தர்மபுரியில்உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு ஊர்வலம்மாணவ-மாணவிகள் பங்கேற்பு


தர்மபுரியில்உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு ஊர்வலம்மாணவ-மாணவிகள் பங்கேற்பு
x
தர்மபுரி

தர்மபுரி

தர்மபுரியில் உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இதில் ஏராளமான கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

உலக மக்கள் தொகை தினம்

உலக மக்கள் தொகை தினத்தையொட்டி தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் சாந்தி தலைமை தாங்கி உறுதிமொழி வாசிக்க அனைத்து துறை அரசு அலுவலர்கள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

அப்போது கலெக்டர் கூறுகையில், மக்கள் தொகை அதிகரிப்பதால் ஏற்படக்கூடிய தாக்கங்கள் குறித்தும், குடும்ப கட்டுப்பாட்டு முறைகள் குறித்தும் தர்மபுரி மாவட்டத்தில் வட்டார வாரியாக பொதுமக்களிடம் தொடர்ந்து எடுத்துரைக்கப்பட்டு வருகிறது. மேலும் நவீன தற்காலிக குடும்ப நல கருத்தடை முறைகள் மற்றும் கருத்தடை மாத்திரைகள் பயன்பாடுகள் குறித்தும் பொதுமக்களிடம் உரிய விழிப்புணர்வுகளை ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று கூறினார்.

விழிப்புணர்வு ஊர்வலம்

தொடர்ந்து கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்ற உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு ரதம் மற்றும் ஊர்வலத்தை கலெக்டர் சாந்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ஊர்வலம் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு செந்தில் நகர் வழியாக இலக்கியம்பட்டியில் முடிவடைந்தது. இதில் கல்லூரி மாணவ, மாணவிகள் உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் பங்கேற்றனர்.

முன்னதாக கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் கட்டுரை, ஓவியம், பேச்சு ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் அமுதவல்லி, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் சாந்தி, சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் ஜெயந்தி, குடும்ப நல துணை இயக்குனர் எழிலரசி, தொழுநோய் துணை இயக்குனர் புவனேஸ்வரி, காசநோய் துணை இயக்குனர் ராஜ்குமார் மற்றும் தொடர்புடைய அரசு அலுவலர்கள், கல்லூரி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.


Next Story