தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு ஊர்வலம்


தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு ஊர்வலம்
x
தினத்தந்தி 25 Jan 2023 6:45 PM GMT (Updated: 2023-01-26T00:15:35+05:30)

பர்கூர், ஓசூரில் தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

கிருஷ்ணகிரி

பர்கூர்

பர்கூர், ஓசூரில் தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

தேசிய வாக்காளர் தினம்

பர்கூரில் தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. பஸ் நிலையத்தில் இருந்து ஊர்வலத்தை தாசில்தார் பன்னீர்செல்வி கொடியசைத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து கல்லூரி மாணவிகள் விழிப்புணர்வு பதாகைகளுடன் மேளதாளம் முழங்க முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக தாலுகா அலுவலகத்துக்கு சென்றனர்.

மேலும் தெருக்கூத்து கலைஞர்கள் தெருக்கூத்து மூலமாக 18 வயது நிரம்பியவர்கள் வாக்காளர்கள் ஆகலாம். தாமதம் இன்றி வாக்காளர் அடையாள அட்டைகளை பெற்று கொள்ளலாம் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தொடர்ந்து பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. இதில் தேர்தல் துணை தாசில்தார் அல்லாபாஷா, தலைமையிடத்து துணை தாசில்தார் பத்மாவதி மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

ஓசூர்

ஓசூரில் 13-வது தேசிய வாக்காளர் தின ஊர்வலம் நடைபெற்றது. ஆர்.வி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் இந்த ஊர்வலத்தை ஓசூர் உதவி கலெக்டர் சரண்யா கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில், அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்று கலை நிகழ்ச்சிகள் நடத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தினர். ஊர்வலத்தில் வாக்காளர்களின் கடமை மற்றும் வாக்களிப்பதின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு மாணவ, மாணவிகள் முக்கிய வீதிகள் வழியாக சென்றனர்.

இந்த ஊர்வலம் உதவி கலெக்டர் அலுவலகத்தில் நிறைவடைந்தது. பின்னர், அங்கு வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையாளர் பாலசுப்பிரமணியன், உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளர் முத்துபாண்டி, தாசில்தார் கவாஸ்கர் மற்றும் அலுவலர்கள், வருவாய்த்துறையினர் கலந்து கொண்டனர். இதை தொடர்ந்து நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தில் மாணவ-மாணவிகள் உள்பட அனைவரும் கையெழுத்திட்டனர்.


Next Story