விழிப்புணர்வு மினி மாரத்தான் ஓட்டம்
தேனி அருகே விழிப்புணர்வு மினி மாரத்தான் ஓட்டம் நடந்தது.
தேனியை அடுத்த பழனிசெட்டிபட்டியில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை தவிர்ப்பது போன்றவற்றை வலியுறுத்தி நெகிழி (பிளாஸ்டிக்) இல்லா தேனி மாவட்டம் என்ற பெயரில் விழிப்புணர்வு மினி மாரத்தான் ஓட்டம் நடந்தது. இதனை மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இதில், 350-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். மினி மாரத்தான் ஓட்டத்தில் முதல் 10 இடங்களை பிடித்தவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார். முன்னதாக கலெக்டர் தலைமையில், நெகிழிப் பொருட்கள் எதிர்ப்பு உறுதிமொழியை அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் எடுத்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் மாசு கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் விஸ்வநாதன், மாவட்ட விளையாட்டு அலுவலர் முருகன், ஊராட்சிகள் உதவி இயக்குனர் அண்ணாதுரை, பழனிசெட்டிபட்டி பேரூராட்சி தலைவர் மிதுன் சக்கரவர்த்தி, துணைத்தலைவர் மணிமாறன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.