மது அருந்துவதால், சிகரெட் பிடிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து பொள்ளாச்சி பஸ் நிலைய சுரங்கப் பாதையில் விழிப்புணர்வு ஓவியங்கள்
மது அருந்துவதால், சிகரெட் பிடிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து பொள்ளாச்சி பஸ் நிலைய சுரங்கப்பாதையில் விழிப்புணர்வு ஓவியங்கள் வரையப்பட்டு உள்ளன.
பொள்ளாச்சி
மது அருந்துவதால், சிகரெட் பிடிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து பொள்ளாச்சி பஸ் நிலைய சுரங்கப்பாதையில் விழிப்புணர்வு ஓவியங்கள் வரையப்பட்டு உள்ளன.
விழிப்புணர்வு ஓவியங்கள்
பொள்ளாச்சி- பாலக்காடு ரோட்டில் எதிர் எதிரே பழைய மற்றும் புதிய பஸ் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் பஸ் நிலையங்களுக்கு வந்து செல்கின்றனர். இந்த நிலையில் இரு பஸ் நிலையங்களுக்கும் பொதுமக்கள் எளிதில் செல்லும் வகையில் ரோட்டின் குறுக்கே சுரங்கப் பாதை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த சுரங்கப் பாதையை பயணிகள் பெரும்பாலும் பயன்படுத்துவதில்லை. இதற்கிடையில் பகல் நேரங்களிலேயே சுரங்க பாதை மது பாராக மாறி வருகிறது. மேலும் சமூக விரோதிகளின் கூடாரமாக சுரங்க பாதை விளங்குகிறது.
இந்த நிலையில் சுரங்கப் பாதையில் நகராட்சி சார்பில் ஓவியங்கள் வரையப்பட்டு உள்ளன. ரத்ததானம், கொரோனா தடுப்பு, மது அருந்துவதால், சிகரெட் பிடிப்பதால் ஏற்படும் தீமைகள், போக்குவரத்து விதிமுறை மீறல் என பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தத்ரூபமாக ஓவியங்கள் வரையப்பட்டு உள்ளன. இவற்றை அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் பார்த்து செல்கின்றனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-
மேற்கூரை சேதம்
நகராட்சி அதிகாரிகள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் சுரங்க பாதையில் விழிப்புணர்வு ஓவியங்கள் வரையப்பட்டு உள்ளது வரவேற்கதக்கது. ஆனால் ஏற்கனவே சுரங்க பாதை சுவற்றில் எச்சில் துப்பி அலங்கோலமாக காட்சி அளித்தது. அதற்கு மேல் ஓவியங்கள் வரையப்பட்டு உள்ளதால், ஓவியங்கள் மீது எச்சில் துப்பியதை போன்று காட்சி அளிக்கிறது.
சுரங்கபாதை நுழைவு வாயிலில் இருந்த பெயர் பலகை கிழிந்து தொங்குகிறது. மேலும் மேற்கூரை சேதமடைந்து கிடப்பதால் மழைநீர் சுரங்க பாதைக்குள் விழுகிறது. எனவே பொதுமக்களுக்கு சுரங்க பாதை இருப்பது தெரியும் வகையில் நுழைவு வாயிலில் ஓவியங்கள் வரைதல், பெயர் பலகை வைக்க வேண்டும். மேலும் பொதுமக்கள் சாலையை கடப்பதை தடுக்க தடுப்பகளை உயர்த்த வேண்டும். சுரங்க பாதை வழியாக செல்லும் பொதுமக்களுக்கு பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.