விழிப்புணர்வு உறுதிமொழி
அருப்புக்கோட்டையில் தூய்மை நகரத்திற்கான விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது.
அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டையில் தூய்மை நகரத்திற்கான மக்கள் இயக்கம் தொடங்கப்பட்டு என் குப்பை என் பொறுப்பு என்ற பெயரில் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக அருப்புக்கோட்டை நகராட்சியில் உள்ள அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் தூய்மை நகரத்திற்கான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நகராட்சி ஆணையாளர் அசோக்குமார் தலைமையில் நகர்நல அலுவலர் ராஜநந்தினி முன்னிலையில் பள்ளி மாணவர்கள் எனது நகரத்தை தூய்மையாக வைத்திருப்பது எனது கடமை, தூய்மை பணிகளுக்கு நேரத்தை ஒதுக்குவேன், மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரித்து தூய்மை பணியாளரிடம் ஒப்படைக்கும்படி பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவேன், பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்ப்பேன் என உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். பள்ளிகளில் தூய்மை நகரத்திற்கான மக்கள் இயக்கம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி, கட்டுரைப்போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள், நகர்மன்ற உறுப்பினர்கள், பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.