தூய்மைக்கான மக்கள் இயக்கம் குறித்து விழிப்புணர்வு உறுதிமொழியேற்பு
தூய்மைக்கான மக்கள் இயக்கம் குறித்து விழிப்புணர்வு உறுதிமொழியேற்கப்பட்டது.
பெரம்பலூர் பழைய பஸ் நிலையத்தில் நகரங்களில் தூய்மைக்கான மக்கள் இயக்கம் என்னும் தலைப்பில் நகரப் பகுதிகளை தூய்மையாக வைத்துக் கொள்வது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது. தூய்மையான சுற்றுச்சூழலை உறுதி செய்யும் பொருட்டு அனைத்து நகர்ப்புற உள்ளாட்சிகளில் பெருமளவிலான மக்கள் பங்கேற்புடன் ஒவ்வொரு மாதமும் 2 மற்றும் 4-வது சனிக்கிழமைகளில் தன்னார்வ அமைப்புகள், குடியிருப்போர் நலச் சங்கங்கள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் பங்களிப்புடன் தீவிர தூய்மைப்பணிகள் மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், ஒவ்வொரு மாதமும் 3-வது புதன்கிழமைகளில் திடக்கழிவு மேலாண்மை மற்றும் தூய்மை குறித்த விழிப்புணர்வு பிரசாரம் பள்ளி மற்றும் கல்லூரிகளில் நடத்தப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் நேற்று முன்தினம் இந்த உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் மாவட்ட கலெக்டர் கற்பகம் தலைமையில் நகர்மன்ற தலைவர் அம்பிகா ராஜேந்திரன், நகராட்சி ஆணையர் ராதா மற்றும் நகர்மன்ற கவுன்சிலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், துப்புரவு பணியாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.