பிளாஸ்டிக் எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி
கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் பள்ளியில் பிளாஸ்டிக் எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
கீழக்கரை,
கீழக்கரை நகராட்சி அதிகாரிகள் ஆலோசனையின் பேரில் இஸ்லாமியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 3500-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர்.3-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளுக்கான பிளாஸ்டிக்கிற்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பிளாஸ்டிக் கழிவு பொருட்கள் மற்றும் காகிதம், கண்ணாடி துண்டுகள், தேங்காய் மூடிகள், சணல் போன்ற கழிவு பொருட்களில் இருந்து கலை படைப்புகளை தயாரிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. வழக்கத்தை காட்டிலும் இந்த ஆண்டிற்கான நிகழ்ச்சியில் மாணவிகள் போட்டி போட்டு ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் ஆர்வத்துடன் களம் இறங்கி தங்கள் திறமையை வெளிப்படுத்தி ஏராளமான படைப்புகளை காட்சிப் படுத்தினர். மாவட்ட அளவில் நடைபெறும் போட்டியை மிஞ்சும் வகையில் மாணவிகள் நூற்றுக்கணக்கான படைப்புகளை தயார் செய்து காட்சிப்படுத்தி தங்கள் திறமையை வெளிப்படுத்தினர்.
பள்ளியின் தாளாளர் எம்.எம்.கே. முகைதீன் இபுராஹிம், இஸ்லாமியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் மேபல் ஜஸ்டஸ் ஆகியோர் கலை படைப்புகளை பார்வையிட்டு மாணவிகளின் தயாரிப்பு குறித்து கேட்டறிந்து பாராட்டினர். முடிவில் மாணவ-மாணவிகள் பிளாஸ்டிக் ஒழிப்பு உறுதிமொழி எடுத்து கொண்டனர்.