நோய் தடுப்பு மருத்துவத்துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி
பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறையின் சார்பாக செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 2-ம் சுற்றின் தீவிர மிஷன் இந்திரதனுஷ் தடுப்பூசி சிறப்பு முகாமிற்கான விழிப்புணர்வு பேரணியை மாவட்ட கலெக்டர் ராகுல்நாத், கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இப்பேரணியில் மருத்துவக்கல்லூரியில் பயிலும் சுமார் 100-க்கும் மேற்பட்ட செவிலியர் கல்லூரி மாணவியர்கள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தொடங்கி செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வரை சென்றனர்.
இந்த நிகழ்ச்சியில் துணை இயக்குனர் (சுகாதாரப்பணிகள்) பரணிதரன், அரசு அலுவலர்கள், செவிலியர்கள் கலந்துகொண்டனர். இந்த மாவட்டத்தில் ஒவ்வொரு வருடமும் சுமார் 32,000 குழந்தைகள் பிறக்கின்றன. அதேபோல் சுமார் 37,000 கர்ப்பிணிகள் கர்ப்பத்தை பதிவு செய்கின்றனர். இந்த குழந்தைகளுக்கும், கர்ப்பிணிகளுக்கும் தேசிய தடுப்பூசி அட்டவணையின்படி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.
விடுபட்ட குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு தீவிர மிஷன் இந்திரதனுஷ் தடுப்பூசி முகாமில் தடுப்பூசி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசி முகாம் அனைத்து மாநிலங்களிலும் 3 சுற்றுகளாக நடைபெற உள்ளது. முதல் சுற்று ஆகஸ்டு 7-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை நடைபெற்றது. 2-வது சுற்று செப்டம்பர் 11-ந்தேதி முதல் 16-ந்தேதி வரையிலும், 3-வது சுற்று அக்டோபர் 9-ந்தேதி முதல் 14-ந்தேதி வரையிலும் நடைபெற உள்ளது. எனவே, பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுமாறு கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்தார்.