குறும்படம் மூலம் விழிப்புணர்வு
தேனி மாவட்டத்தில் மழைநீர் சேகரிப்பு குறித்து குறும்படம் மூலம் விழிப்புணர்வு பிரசார பயணத்தை கலெக்டர் ஷஜீவனா தொடங்கி வைத்தார்.
மழைநீர் வார விழா மற்றும் வடகிழக்கு பருவமழையையொட்டி மழைநீர் சேகரிப்பின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், குறும்படம் மூலம் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி தேனி மாவட்டத்தில் விழிப்புணர்வு பிரசார பயணத்தை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் ஷஜீவனா நேற்று தொடங்கி வைத்தார். செய்தி மக்கள் தொடர்புத்துறையின் டிஜிட்டல் திரை வாகனம் மூலம், மழைநீர் சேகரிப்பின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு குறும்படம் ஒளிபரப்பு செய்யப்பட்டது. தொடர்ந்து மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இந்த குறும்படம் திரையிடப்பட்டு விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சியில், குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர்கள் ராமச்சந்திரன், கருப்பையா, உதவி நிர்வாக பொறியாளர்கள் கண்ணன், மனோகரன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நல்லதம்பி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.