பண மோசடி ஆசாமிகளிடம் விழிப்புணர்வுடன் இருப்பது எப்படி?
பண மோசடி ஆசாமிகளிடம் விழிப்புணர்வுடன் இருப்பது எப்படி? என்று திருப்பூர் மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீசார் துண்டுபிரசுரங்கள் கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.
பண மோசடி ஆசாமிகளிடம் விழிப்புணர்வுடன் இருப்பது எப்படி? என்று திருப்பூர் மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீசார் துண்டுபிரசுரங்கள் கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.
பண மோசடி புகார்
திருப்பூர் மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீசார், பண மோசடி சம்பவங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டுபிரசுரங்கள் கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். அதன்படி வங்கிகளில் கடன் பெறுவதற்கு தனிநபர்கள் மற்றும் தொழில் நடத்துவோர் ஈடாக வைக்கும் பத்திரத்தின் உண்மை தன்மையை ஆராயாமல் கடன் கொடுத்து ஏமாறக்கூடாது. எம்.எல்.எம். என்று சொல்லக்கூடிய தங்களுக்கு கீழ் ஆட்களை சேர்த்து விட்டால் கமிஷன் கிடைக்கும் என்ற ஆசைவார்த்தைகளை நம்பி நீங்களும் ஏமாந்து மற்றவர்களையும் ஏமாற்ற வேண்டாம். எம்.எல்.எம். உரிமையாளர் உள்பட அதில் சேர்ந்த ஒவ்வொருவரும் குற்றவாளிகள் ஆவார்கள்.
பொதுமக்கள் தங்களுக்கு நன்கு அறிமுகமான நண்பர்கள், உறவினர்கள் அல்லது அறிமுகம் இல்லாத ஆட்களாக இருந்தாலும் அவர்கள் சட்டப்படி அங்கீகாரம் பெறாமலும், பதிவு செய்யாமலும் சீட்டு நடத்தினால் அது தீபாவளி சீட்டு, பலகார சீட்டு, வாரச்சீட்டு, மாதச்சீட்டு, ஏலச்சீட்டு எதுவாக இருந்தாலும் நம்பி பணம் கட்டி ஏமாற வேண்டாம். அதிக கசர் தொகை கிடைக்கும் என நம்பி யாரிடமும் சீட்டு சேர்ந்து ஏமாற வேண்டாம்.
வீட்டுமனைகள்
அரசு வேலைவாங்கி தருவதாக, அரசியல் பிரமுகர்களின் நண்பர்கள் எனக்கூறி பணம் கேட்டால் யாரும் கொடுத்து ஏமாற வேண்டாம். வெளிநாடுகளில் வேலைவாங்கிக்கொடுப்பதாக பதிவு செய்யப்படாத முகவரி மற்றும் நிறுவனங்களிடம் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். முறையாக பதிவு செய்யப்படாத வீட்டுமனைகள், இடங்களை குறைவான விலைக்கு வாங்கி தருவதாக கூறுவதை நம்ப வேண்டாம். மாத தவணைகளில் வீட்டுமனை மற்றும் இடம் விற்பனை செய்யும் நிறுவனங்களிடம் உஷாராக இருக்க வேண்டும்.
தெரியாத நபர்களிடம் ஏற்றுமதி, இறக்குமதிக்கு உற்பத்தி ஆணை கொடுத்து ஏமாற வேண்டாம். பங்குதாரர்கள் தங்களின் கணக்கு வழக்குகளை சரியாக தணிக்கை செய்ய வேண்டும். இணையதளம் மூலமாக புதிதாக மற்றும் தெரியாத நபர்களின் விளம்பரங்களை பார்த்து அதிக லாபம் கிடைக்கும் என நம்பி பொருட்களை அனுப்பியோ, பெற்றோ ஏமாற வேண்டாம்.
புகார் தெரிவிக்கலாம்
நிதி நிறுவனங்கள் மக்களிடம் இருந்து டெபாசிட் பெறுவதற்காக பரிசுப்பொருட்கள், ஊக்கத்தொகை முதலியவற்றை தருவது சட்டப்படி தடை செய்யப்பட்டுள்ளது. அப்படி கொடுக்கும் நிறுவனங்கள் போலியானது. இதுகுறித்த புகார்களை 0421 2234044 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என்று மத்திய குற்றப்பிரிவு போலீசார் எச்சரித்துள்ளனர்.