ஆயுத பூஜையையொட்டி விற்பனையாகாத பூசணிக்காய்களை சாலையோரம் கொட்டிச் சென்ற அவலம்
ஆயுத பூஜையையொட்டி விற்பனையாகாத பூசணிக்காய்களை டன் கணக்கில் சாலையோரம் வியாபாரிகள் போட்டு விட்டுச் சென்றுள்ளனர். இதனை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
ஆயுத பூஜையையொட்டி விற்பனையாகாத பூசணிக்காய்களை டன் கணக்கில் சாலையோரம் வியாபாரிகள் போட்டு விட்டுச் சென்றுள்ளனர். இதனை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
ஆயுத பூஜை
உழைக்கும் ஒவ்வொருவரும் அவர்களின் உழைப்பிற்கு உறுதுணையாக இருக்கும் ஆயுதங்களின் பயனை உணர்த்துவதற்காகவே ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது.
உயிருள்ள மற்றும் உயிரற்ற பொருள் ஆகியவற்றில் இறைவன் இருப்பதாக நம்பப்படுகிறது. நாம் உயிர் வாழ்வதற்கு உயிரற்ற பொருட்களும் பயன்படுவதால் அந்த ஆயுதங்களுக்கு பூஜை செய்து கொண்டாடி வருகின்றனர்.
ஆயுத பூஜையையொட்டி தொழிலாளர்கள், தாங்கள் பயன்படுத்தும் பொருட்களை சுத்தம் செய்வார்கள். மேலும் வாகனங்களையும் சுத்தம் செய்து சந்தனம், குங்குமம் இட்டு மாலை அணிவித்து பூஜை செய்து வழிபடுவார்கள்.
பூசணிக்காய்
இவ்வாறு கொண்டாடப்படும் ஆயுத பூஜைக்கு முக்கியமான பொருளாக வெள்ளை பூசணிக்காய் பயன்படுத்தப்படுகிறது.
பூஜை செய்து திருஷ்டி போக்குவதற்காக அந்த பூசணிக்காய்களை வாகனங்கள் முன்பும், நிறுவனங்கள் முன்பும் உடைப்பார்கள். இதனால் ஆயுத பூஜையையொட்டி பூசணிக்காய்களுக்கு மவுசு அதிகரித்து காணப்படும். ஏராளமானவர்கள் இந்த பூசணிக்காய்களை வாங்கிச் சென்று பயன்படுத்துவார்கள்.
கடந்த 23-ந் தேதி ஆயுத பூஜையை முன்னிட்டு திருவண்ணாமலையில் பல்வேறு இடங்களில் சாலை ஓரங்களில் பூசணிக்காய்கள் குவிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டன.
இதனை ஏராளமானவர்கள் வாங்கிச் சென்றனர். பூசணிக்காய்களை பயிரிட்ட விவசாயிகளும் நேரடியாக வாகனங்களில் கொண்டு வந்து விற்பனை செய்தனர்.
சாலையோரம் போட்டு விட்டு...
இந்த நிலையில் விற்பனை செய்யப்படாத பூசணிக்காய்களை ஆங்காங்கே சாலையோரம் வியாபாரிகள் போட்டு விட்டு சென்று விட்டனர். இதனால் பல்வேறு இடங்களில் பூசணிக்காய்கள் டன் கணக்கில் குவிந்து காணப்படுகிறது. பலர் ஆங்காங்கே உள்ள குப்பை தொட்டிகளிலும் வீசிவிட்டுச் சென்றுள்ளனர்.
பல இடங்களில் அழுகி துர்நாற்றமும் வீசுகிறது. இதனை நகராட்சி சார்பில் அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது.
விற்பனைக்காக கொண்டு வரும் பூசணிக்காய்களை விற்பனை முடிந்த பின்னர் விற்பனை ஆகாத காய்களை வியாபாரிகளை அப்புறப்படுத்த அதற்கான வழிமுறைகளை கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
உரிய நடவடிக்கை
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், திருவண்ணாமலைக்கு வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் பலர் பூசணிக்காய் கொண்டு வந்து விற்பனை செய்தனர். போதிய அளவில் பூசணிக்காய் விற்பனை ஆகவில்லை.
அவற்றை திரும்ப கொண்டு செல்ல வேண்டும் என்றால் அதற்கு வாகன வாடகை கட்டணம் போன்ற செலவுகள் ஏற்படும். அதை தவிர்ப்பதற்காகவே ஆங்காங்கே போட்டு விட்டு சென்றுள்ளனர். இதனை தடுப்பதற்கான உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றனர்.