காரையூர் அருகே அய்யனார் கோவில் தேரோட்டம்


காரையூர் அருகே அய்யனார் கோவிலில் தேரோட்டம் நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

புதுக்கோட்டை

தேரோட்டம்

காரையூர் அருகே உள்ள கீழத்தானியத்தில் பிரசித்தி பெற்ற மாவயல் காட்டு அய்யனார் கோவில் உள்ளது. இந்த கோவிலின் திருவிழா கடந்த 4-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து மண்டகப்படிதாரர்கள் சார்பில் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

விழாவில் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி அய்யனார் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினார். பின்னர் மேளதாளம் முழங்க வாண வேடிக்கையுடன் திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து முக்கிய வீதிகள் வழியாக இழுத்து சென்றனர். பின்னர் தேர் நிலையை வந்தடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று (ஞாயிற்றுக்கிழமை) மஞ்சள் நீராட்டு விழாவுடன் திருவிழா நிறைவடைகிறது.

கிடாவெட்டு பூஜை

கீரமங்கலம் வடக்கு அறிவொளி நகரில் நரிக்குறவர் காலனி உள்ளது. இவர்களின் குலதெய்வமான மதுரை வீரன், காளியம்மன், மாரியம்மன், மீனாட்சி அம்மனுக்கு திருவிழா நடைபெற்று வருகிறது. நேற்று காலை எருமை, ஆட்டுக்கிடாய் வெட்டும் பூஜை நடந்தது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மெய்யநாதன் உள்பட திரளானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ஆதனக்கோட்டை அருகே உள்ள ராஜாபகதூர் கிராமத்தில் உள்ள முனியாண்டவருக்கு கிடா வெட்டுபூஜை நடைபெற்றது. இதையொட்டி முனியாண்டவர் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் பக்தர்கள் ஆடு, கோழிகளை பலியிட்டு தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

திருவரங்குளம் அருகே உள்ள தோப்பு கொல்லை திருவள்ளுவர் ராக்கம்மா கோவிலில் கிடாவெட்டு பூஜை நடைபெற்றது. இதையொட்டி சுவாமிக்கு மலர் அலங்காரம் செய்து மகா தீபம் காட்டப்பட்டது. பின்னர் கிடா வெட்டி பரிவார தெய்வங்களுக்கு படையலிடப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டது. மேட்டுப்பட்டி காடப்பிள்ளை அய்யனாருக்கு திருக்கட்டளை குளத்தில் இருந்து புனித நீர் எடுத்து வந்து அபிஷேகம் நடைபெற்றது. இரவு 7 மணிக்கு சுவாமிக்கு பொங்கல் வைத்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இரவு 12 மணிக்கு சின்ன கருப்பர் மற்றும் பரிவார சுவாமிகளுக்கு கிடா வெட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

குத்துவிளக்கு பூஜை

கீரனூர் கிள்ளுக்கோட்டையில் உள்ள துர்க்கையம்மனுக்கு காலை 9 மணியளவில் மகா அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் 10.30 மணியளவில் குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது. இதேபோல் கீரனூர் மார்க்கெட் பகுதியில் அமைந்துள்ள பகவதி அம்மன் கோவிலில் காய்கனி வியாபாரிகள் ஒற்றுமை சங்கத்தின் சார்பில் பகவதி அம்மனுக்கு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

திருப்புனவாசல் வடக்கு வீதியில் உள்ள காட்டேரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜை நடைபெற்றது. பின்னர் நடைபெற்ற குத்துவிளக்கு பூஜையில் திரளான பெண்கள் கலந்து கொண்டனர். இதேபோல் ஆலங்குடி பாரதிதாசன் சாலையில் உள்ள வீரமாமுனீஸ்வரர் கோவில், அரிமளம் பேரூராட்சி பகுதியில் உள்ள கோடகநல்லூர் சுந்தர சுவாமி அதிஷ்டானத்தில் குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது.


Next Story