விடுமுறை நாளான இன்று ராமேசுவரத்தில் அய்யப்ப பக்தர்கள் கூட்டம்...!
விடுமுறை நாளான இன்று ராமேசுவரத்தில் அய்யப்ப பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.
ராமேசுவரம்,
இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்க தலங்களில் ஒன்றாக கருதப்படுவது ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவில். இதனால் இந்த கோவிலுக்கு ஆண்டுதோறும் பக்தர்கள் வந்து செல்வார்கள். ராமேசுவரத்திற்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் அதிக அளவில் வந்து செல்வார்கள்.
கோவிலுக்கு வரக்கூடிய பக்தர்கள் அங்குள்ள அக்னி தீர்த்தக்கடல் மற்றும் கோவிலில் உள்ள 22 தீர்த்தங்களில் நீராடி வழிபட்டு செல்வார்கள். இதனால் ராமேசுவரம் கோவிலில் தினமும் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படும்.
அந்த வகையில் விடுமுறை நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) ராமேசுவரத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். தற்போது சபரிமலை சீசன் என்பதால் அய்யப்ப பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. இதனால் கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள வீதிகள், அக்னிதீர்த்த கடல் மற்றும் புனித தீர்த்தங்களில் பக்தர்கள் கூட்டமாகவே காணப்பட்டது. அவர்கள் நீண்ட வரிசையில் வெகு நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.