பி.ஏ.பி. அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருவதால் பி.ஏ.பி. அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
பொள்ளாச்சி
தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருவதால் பி.ஏ.பி. அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
பருவமழை
பொள்ளாச்சி, வால்பாறை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த ஆண்டு தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை நன்றாக பெய்தது. இதன் காரணமாக பி.ஏ.பி. அணைகள் மற்றும் அதன் தொகுப்பு அணைகள் நிரம்பின. ஆனால் அதன்பிறகு போதிய மழைப்பொழிவு இல்லை. இதன் காரணமாக பி.ஏ.பி. அணைகளின் நீர்மட்டம் நாளுக்குநாள் குறைய தொடங்கின.
மேலும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பரம்பிக்குளம் அணையின் மதகு உடைந்ததால், அணையில் இருந்து தண்ணீர் வீணாக கடலுக்கு சென்றது. இதன் காரணமாக குடிநீருக்கும், பாசனத்திற்கும் போதிய தண்ணீர் வழங்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.
பரம்பிக்குளம்
இதற்கிடையில் கடந்த 2-ந் தேதி மழை வேண்டி பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆழியாறு அணையில் உள்ள விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை செய்தனர். இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக பொள்ளாச்சி பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடங்கி தீவிரமாக பெய்து வருகிறது.
இதன் காரணமாக பரம்பிக்குளம் அணைக்கு வினாடிக்கு 2,488 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கிறது. 72 அடி கொள்ளளவு கொண்ட அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 2 அடி உயர்ந்து தற்போது 22.20 அடியாக உள்ளது.
மகிழ்ச்சி
இதேபோன்று ஆழியாறு அணைக்கு வினாடிக்கு 492 கன அடி நீர்வரத்து உள்ளது. 120 அடி கொள்ளளவு கொண்ட அணையின் நீர்மட்டம் 59 அடியாக உயர்ந்து உள்ளது. இதேபோன்று அனைத்து பி.ஏ.பி. அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்து உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.