பி.ஏ.பி. கால்வாயில் தண்ணீர் திருட்டை தடுக்க வேண்டும்


பி.ஏ.பி. கால்வாயில் தண்ணீர் திருட்டை தடுக்க வேண்டும்
x
தினத்தந்தி 17 Oct 2023 8:00 PM GMT (Updated: 17 Oct 2023 8:00 PM GMT)

கண்காணிப்பிற்கு செல்லும் விவசாயிகளுக்கு பாதுகாப்பு இல்லை. மேலும் பி.ஏ.பி. கால்வாயில் தண்ணீர் திருட்டை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சப்-கலெக்டரிடம் விவசாயிகள் வலியுறுத்தி பேசினார்கள்.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் முறையீட்டுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு சப்-கலெக்டர் பிரியங்கா தலைமை தாங்கினார். கூட்டத்தில் விவசாயிகள் கலந்துகொண்டு கோரிக்கைகள் குறித்து பேசினார்கள். அப்போது அவர்கள் கூறியதாவது:-


பி.ஏ.பி. கால்வாயில் இருந்து 15 மீட்டர் தூரத்திற்கு பிறகு தான் வீட்டுமனைகள் அமைக்க வேண்டும். ஆனால் விதிமுறைகளை மீறி வீட்டுமனைகளாக பிரிக்கப்பட்டு உள்ளது. மேலும் தண்ணீர் திருட்டை கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும். கூட்டத்தில் விவசாயிகள் தெரிவிக்கும் புகார்கள், மனுக்களுக்கு அதிகாரிகள் உரிய பதில் அளிப்பதில்லை. தென்னையில் வேர் வாடல் நோய் தாக்குலை வேளாண்மை துறை அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை. ஆழியாறு அணையில் நடந்த பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு விழாவில் சில விரும்பதகாத நிகழ்வுகள் நடந்து விட்டன. இதுபோன்று மீண்டும் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

திட்டக்குழு தலைவர், விவசாயிகளை புறக்கணித்து பாசன நீர் திறப்பை நடத்திய ஆளும்கட்சி பிரமுகர்கள் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். மழைக்காலத்தில் நல்லாற்றில் பாய்ந்தோடும் வெள்ள நீரை பாலாற்றில் திறந்து விட வேண்டும். புதிய ஆயக்கட்டு பாசன கால்வாயில் ரோந்து சென்றும் தண்ணீர் திருட்டை தடுக்க முடியவில்லை. கண்காணிக்க செல்லும் விவசாயிகளுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. எனவே தண்ணீர் திருடும் நபர்கள் மீது வழக்குபதிவு செய்வதோடு, மின் இணைப்பை துண்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். காட்டு பன்றி தொல்லையால் பயிர்களை காப்பாற்ற முடியவில்லை. எனவே காட்டு பன்றியை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். பாலக்காடு சாலையில் நரசிங்காபுரம் பகுதியில் மறுஅளவீடு மேற்கொண்டு அகலப்படுத்த வேண்டும். ஜமீன்முத்தூர், கோடாங்கபட்டி பகுதியில் உள்ள பாறைகளை உடைப்பதற்கு மறு டெண்டர் விடக் கூடாது. ஏற்கனவே அதிகமாக தோண்டியதால் அருகில் உள்ள வீடுகளில் உள்ள மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.


இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.



Next Story