பச்சாயி அம்மன், மன்னார் ஈஸ்வரன் கோவில் தேரோட்டம்
பச்சாயி அம்மன், மன்னார் ஈஸ்வரன் கோவில் தேரோட்டம் நடந்தது.
பாடாலூர்:
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, நாட்டார்மங்கலம் கிராமத்தில் உள்ள பச்சாயி அம்மன், மன்னார் ஈஸ்வரன் கோவில் தேர்த்திருவிழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி கடந்த 19-ந் தேதி இரவு வடக்கிமலை அடிவாரத்தில் குடியழைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் திருவிழா தொடங்கியது. திருவிழாவில் பாரம்பரிய முறைப்படி பூக்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் பச்சாயி, மன்னார் ஈஸ்வரன், பூவாயி, காத்தாயி, விநாயகர் வீதியுலா நடைபெற்றது. காத்தாயி சுவாமி அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் மாவலிங்கையார் இல்லத்திற்கு வந்தது. பின்னர் பெருமாள் கோவில் முன்பு வீதி உலா தொடங்கி முக்கிய வீதியின் வழியாக சென்று மன்னார் ஈஸ்வரன் கோவிலை சென்றடைந்தது.
நேற்று காலை கோவிலில் பொங்கல், மாவிளக்கு பூஜை நடந்தது. பின்னர் மதியம் அலங்கரிக்கப்பட்ட தேரில் உற்சவர் பச்சாயி அம்மன், காத்தாயி, பூவாயி சுவாமிகள் எழுந்தருளினர். மாலையில் திரளான பக்தர்கள் பக்தி கோஷம் முழங்க தேரை வடம் பிடித்து இழுத்தனர். கோவில் வளாகத்தை சுற்றி வலம் வந்த தேர் நிலையை அடைந்தது. இதைத்தொடர்ந்து பூக்குழி மிதித்தல் நடைபெற்றது. விரதமிருந்த பக்தர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேற அக்னி குண்டத்தில் இறங்கி தீ மிதித்து நேர்த்திக்கடனை செலுத்தினர். இதில் நாட்டார்மங்கலம், கூத்தனூர், சீதேவிமங்கலம், செட்டிகுளம், பாடாலூர் போன்ற கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று(சனிக்கிழமை) மஞ்சள் நீராடுதல் மற்றும் குடிவிடுதல் நிகழ்ச்சிகளுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை நாட்டார்மங்கலம் பச்சாயி அம்மன், மன்னார் ஈஸ்வரன் சுவாமி வழிபாட்டு குடிமக்கள் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.