இயற்கை துறைமுகத்தை உருவாக்கிய உப்பங்கழிகள்
இயற்கை துறைமுகத்தை உருவாக்கிய உப்பங்கழிகள் குறித்து கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு தொல்லியல் ஆய்வாளர் விளக்கம் அளித்து உள்ளார்.
தொண்டி,
இயற்கை துறைமுகத்தை உருவாக்கிய உப்பங்கழிகள் குறித்து கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு தொல்லியல் ஆய்வாளர் விளக்கம் அளித்து உள்ளார்.
மரபு நடை பயணம்
ராமநாதபுரம் கலை இலக்கிய ஆர்வலர்கள் சங்கமும், மாவட்ட நிர்வாகமும் இணைந்து ராமநாதபுரம் ராஜா மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் 9-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை 5-வது புத்தகத் திருவிழா நடைபெறுகிறது. இதையொட்டி ராமநாதபுரம் மாவட்ட பாரம்பரியம், வரலாறு, சுற்றுலா சிறப்புமிக்க இடங்கள் பற்றிய விழிப்புணர்வை கல்லூரி மாணவ, மாணவியரிடம் ஏற்படுத்தும் பொருட்டு தேவிபட்டினம், திருப்பாலைக்குடி, காரங்காடு ஆகிய இடங்களுக்கு மாணவர்களை அழைத்துச் செல்லும் மரபு நடை நிகழ்வு மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் உத்தரவின்பேரில் ஏற்பாடு செய்யப்பட்டது. உதவி கலெக்டர் (பயிற்சி) நாராயணசர்மா நிகழ்வை தொடங்கி வைத்தார்.
இதை தொடர்ந்து ஒரு வாகனம் ஒன்றில் சுமார் 60-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தொண்டி அருகே உள்ள காரங்காடு சூழல் சுற்றுலா மையத்திற்கு வந்தனர். கவசங்களுடன் படகுகளின் மூலம் கடலுக்குள் சென்று இயற்கை தந்த அருட்கொடையாக உள்ள மாங்குரோவ் காடுகளையும், அழகிய பறவைகளின் கூட்டங்களையும் கண்டு ரசித்தனர்.
உப்பங்கழிகள்
அப்போது மரபு பயணத்தை ஒருங்கிணைத்த தொல்லியல் ஆய்வாளர் ராஜகுரு இயற்கை துறைமுகங்களை உருவாக்கும் உப்பங்கழிகள் குறித்து கல்லூரி மாணவ,மாணவியருக்கு விளக்கம் அளித்தார். இது குறித்து அவர் பேசியதாவது:-
உப்பங்கழி என்பது மழைநீரும், கடல்நீரும் சேரும் பகுதி. கிழக்கு கடற்கரை பகுதியில் ஓடை, ஆறுகள், கடலில் கலக்கும் கழிமுகப்பகுதி உப்பங்கழிகளால் பல இயற்கை துறைமுகங்கள் உருவாகியுள்ளன. முற்காலத்தில் கப்பல்களில் இருந்து சரக்குகளை படகுகளில் ஏற்றி வந்து கரையில் இறக்குவதற்கு உப்பங்கழிகள் உதவியாக இருந்துள்ளன. சங்க இலக்கியங்கள் வர்ணிக்கும் கடற்கரைச்சோலை, துறைமுகத்தின் சூழலை அறிந்துகொள்ள காரங்காடு, தேவிபட்டினம், திருப்பாலைக்குடி உதவுகிறது. இவை ஆங்கிலேயர் காலம் வரை துறைமுகமாக இருந்தன.
சிற்பக்கலை சிறப்பு
தேவிபட்டினம், திருப்பாலைக்குடி, செவ்விருக்கை நாட்டுப் பகுதியில் இருந்தன. இரு கோவில்களிலும் கருவறை விமானத்தின் பிரஸ்தரம் வரை கருங்கற்கள் மற்றும் மணற்பாறைகளை கொண்டும், மேல்பகுதி செங்கல் கொண்டும் கட்டப்பட்டுள்ளது. இவை சிறிய கோவில்களாக இருந்தாலும் கட்டிடக்கலை, சிற்பக்கலை சிறப்பு கொண்டவை.
இங்குள்ள சிவன் கோவில்களின் அமைப்பு கொண்டு இவை கி.பி.11-ம் நூற்றாண்டில் சோழர் காலத்தில் கட்டப்பட்டதாக கருதலாம். கிழக்கு கடற்கரைப்பகுதிகளில் சோழர்கள் ஆதிக்கம் செலுத்தியதன் தடயங்கள் அதிகமாக காணப்படுகின்றன.
திருப்பாலைக்குடி கோவிலில் சதுரமாக தொடங்கும் விமானத்தின் கீழ்ப்பகுதி மேலே செல்லச் செல்ல வட்டமாக குறுகி உள்ளது. இது தஞ்சை பெரியகோவில் விமானம் போன்று சிறியதாக அமைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட சுற்றுலா அலுவலர் வெங்கடாசலபதி, கல்லூரி பேராசிரியர்கள் இளவரசன், பெர்லின் ஆகியோர் செய்திருந்தனர். இதில் வனவர் நவிந்தன், வெளியில் வனக்காப்பாளர் செல்வராகவன், ராமநாதபுரம் சேதுபதி அரசு கல்லூரி, கீழக்கரை தாசிம்பீவி மகளிர் கல்லூரி மாணவ- மாணவிகள் 50 பேர் கலந்து கொண்டனர்.