வாகன ஓட்டிகளை பரிதவிக்க வைக்கும் பைக்காரா சாலை -உரிய நடவடிக்ைக எடுப்பது எப்போது?


வாகன ஓட்டிகளை பரிதவிக்க வைக்கும் பைக்காரா சாலை -உரிய நடவடிக்ைக எடுப்பது எப்போது?
x
தினத்தந்தி 5 Jun 2023 12:15 AM IST (Updated: 5 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

வாகன ஓட்டிகளை பரிதவிக்க வைக்கும் பைக்காரா சாலையை சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டு உள்ளது.

நீலகிரி

சர்வதேச சுற்றுலாத்தலமான நீலகிரி மாவட்டத்தில் நிலவும் இதமான காலநிலையை அனுபவிக்கவும், இயற்கை வளம் மிகுந்த வனப்பகுதிகள் மற்றும் சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்கவும் தமிழகத்தின் பிற மாவட்டங்கள், வெளிமாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். பொதுவாக ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் முதலாவது சீசனும், செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மாதங்களில் 2-வது சீசனும் களைகட்டும்.

அதன்படி இந்த ஆண்டு முதல் சீசனையொட்டி வந்த சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம், சுற்றுலாத்துறை, தோட்டக்கலைத்துறை மற்றும் பிற துறைகள் சார்பில் கடந்த மாதம் 6-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை கோடை விழா நடத்தப்பட்டது. கோடை சீசனான கடந்த ஏப்ரல், மே மாதத்தில் மட்டும் சுமார் 8½ லட்சம் சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வந்து சென்றுள்ளனர்.

பைக்காரா

இதற்கிடையே பள்ளிகள் திறக்க ஒரு வார காலம் இருப்பதால் சுற்றுலா பயணிகள் வருகை இன்னும் குறையாமல் உள்ளது.

ஊட்டி நகர்ப்பகுதியை சுற்றிப் பார்க்கும் சுற்றுலா பயணிகள் அடுத்தபடியாக கூடலூர் சாலையில் உள்ள சூட்டிங் மட்டம் மற்றும் பைக்காரா அணைக்கு செல்கின்றனர். இதில் கூடலூர் சாலையில் இருந்து பைக்காரா அணைக்கு செல்லும் சாலை குண்டும் குழியுமாக படுமோசமாக உள்ளது. இதனால் அந்த சாலையில் அடிக்கடி வாகன விபத்துகள் அரங்கேறுகின்றன. மேலும் வாகன ஓட்டிகளை பரிதவிக்க வைக்கும் வகையில் சாலையில் மிகவும் பரிதாபமான நிலையில் காணப்படுகுிறது.

இந்த சாலையில் சீசன் நாட்களில் மட்டும் ஒரு நாளைக்கு ஆயிரம் வாகனங்கள் சென்று வருகிறது. இதில் சுமார் 10,000 பேர் சென்று வருகின்றனர். எனவே இந்த சாலையை சரி செய்ய வேண்டும். என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறிய கருத்துகள் வருமாறு:-

30 நிமிடங்கள் ஆகிறது

வயநாட்டை சோந்த முகசின்: கேரளாவில் இருந்து நீலகிரி மாவட்டத்திற்கு காரில் சுற்றுலா வந்தோம். பல்வேறு இடங்களுக்கு சென்று விட்டு படகு சவாரி செய்வதற்காக பைக்காரா வந்தோம். ஊட்டியில் இருந்து கூடலூர் செல்லும் சாலை தேசிய நெடுஞ்சாலை கட்டுப்பாட்டில் இருப்பதால் நன்றாக உள்ளது. ஆனால் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளதாக கூறப்படும் இந்த சாலை படுமோசமாக இருப்பதால், வெறும் 2 கிலோமீட்டர் தூரத்தை கடக்க 30 நிமிடங்கள் ஆகிறது. இந்த சாலையில் கார் வந்தவுடன் நுழைவு கட்டணம் தனியாக வசூலிக்கப்படுகிறது. அப்படி இருக்கும் சூழ்நிலையில் இந்த சாலை பராமரிப்பு இவ்வாறு இருப்பது நன்றாக இல்லை. இதில் பயணித்தால் உடல் வலி அதிகரிக்கிறது. முக்கிய சுற்றுலா தளத்தில் உள்ள இந்த சாலையை சரி செய்ய வேண்டும்.

மிகவும் மோசமான சாலை

ஊட்டியை சேர்ந்த திலீப்:- நான் சுற்றுலா வாகனம் ஓட்டி வருகிறேன். நீலகிரி மாவட்டத்தில் உள்ள பல இடங்களுக்கு சென்றுள்ளேன். அவற்றையெல்லாம் பார்க்கும் போது இந்த சாலை மிகவும் மோசமாக உள்ளது. சுற்றுலா பயணிகள் இந்த இடத்திற்கு வர அழைத்தால் தயக்கம் ஏற்படுகிறது. இந்த சாலையை சரி செய்தால் மிகவும் நன்றாக இருக்கும். மழை பெய்தால் இந்த பகுதி முழுவதும் சேரும் சகதியுமாக மாறிவிடுகிறது. உள்ளூர் வாகன டிரைவர்களுக்கே இந்த சாலை சவாலாக இருக்கும் நிலையில் வெளியூர் டிரைவர்கள் வந்தால் மிகவும் சிரமப்படுவார்கள். அதனால் பழுதான சாலையை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மிகவும் சிரமப்பட்டோம்

சென்னையை சேர்ந்த கர்ணா:- நீலகிரியை சினிமா படங்களில் காட்டும் போது மிகவும் அருமையாக உள்ளது. அந்த ஆசையில் இங்கு வருகிறோம். நகர் பகுதியில் இருந்து அவலாஞ்சி வரை செல்லும் சாலை நன்றாக இருந்தது. ஆனால் அவலாஞ்சி வனப்பகுதியில் உள்ள சாலை படுமோசமாக இருக்கிறது. அதேபோல் ஊட்டியில் இருந்து பைக்காரா பிரிவு வரை வரும் சாலை நன்றாக உள்ளது. ஆனால் அங்கிருந்து பைக்காரா அணை பகுதிக்கு சென்று படகு சவாரி செல்லும் இடம் குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. காரில் வந்தால் பெரிய அளவில் தெரியாது. வேனில் வந்தால், மிகவும் சிரமமாக உள்ளது.

நடவடிக்கை எடுக்க ேவண்டு்ம்

பிரியங்கா- ரவிசங்கர் தம்பதி:-

மனமகிழ்ச்சிக்காக சுற்றுலா தளங்களுக்கு வருகிறோம். அவ்வாறு வரும்போது சுற்றுலா தலங்களில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தால் தான் மனநிறைவு கிடைக்கும். காரில் நாங்கள் இங்கு வரும்போது எதிரே வந்த வாகனத்திற்கு ஒரு சில இடங்களில் வழி விட முடியவில்லை. அந்த அளவுக்கு சாலை முழுவதும் குண்டும் குழியுமாக காணப்படுகிறது.

தற்போதைய சீசன் முடிந்துவிட்டது. நீலகிரியை பொருத்தவரை செப்டம்பர் மாதம் 2-வது சீசன் தொடங்கும். எனவே இரண்டாவது சீசன் தொடங்குவதற்குள் அல்லது அடுத்த சீசன் ஏற்படும் முன்னர் இந்த சாலையை சரி செய்தால் அனைத்து தரப்பினருக்கும் பயனுள்ளதாக இருக்கும். இதற்கு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மலைப்பகுதி மேம்பாட்டு திட்டத்தில்

சாலை சீரமைப்பு

மாவட்ட வன அலுவலர் கவுதம் கூறியதாவது:- கூடலூர் சாலையில் இருந்து பைகாரா அணை வரை செல்லும் 1½ கிலோ மீட்டர் தூர சாலை தற்போது சேதம் அடைந்துள்ளது. எனவே மலைப்பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் இதை சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ரூ.3 கோடி கேட்டு கடிதம் அனுப்பி உள்ளோம். விரைவில் இந்த திட்டத்தின் கீழ் பணம் ஒதுக்கப்பட்டதும் சாலையை சரி செய்யும் பணிகள் தொடங்கப்படும். ஒரு வருடத்திற்குள் இந்த பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதேபோல் வனப்பகுதி கட்டுப்பாட்டில் எந்தெந்த இடங்களில் சாலைகள் மோசமாக உள்ளது அவற்றையெல்லாம் படிப்படியாக சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story