ஜாமீனில் வந்த ரவுடி வெட்டிக்கொலை: நண்பன் கொலைக்கு பழிக்குப்பழியாக தீர்த்து கட்டினர்


ஜாமீனில் வந்த ரவுடி வெட்டிக்கொலை: நண்பன் கொலைக்கு பழிக்குப்பழியாக தீர்த்து கட்டினர்
x

ஜாமீனில் வெளியே வந்த ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். நண்பன் கொலைக்கு பழிக்குப்பழியாக இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

பூந்தமல்லி,

திருவேற்காடு, திருவேங்கடம் நகரைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 28). ரவுடியான இவர், திருவேற்காடு போலீஸ் நிலையத்தில் சரித்திர பதிவேடு குற்றவாளி ஆவார். இவர் மீது கொலை, கஞ்சா, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.

நேற்று முன்தினம் இரவு கோயம்பேடு, மந்தைவெளி தெருவில் உள்ள தனது தம்பி வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த மர்ம கும்பல் ராஜ்குமாரை ஓட, ஓட விரட்டி சரமாரியாக வெட்டிக்கொன்று விட்டு தப்பி ஓடிவிட்டன.

இதுபற்றி தகவல் அறிந்ததும் கோயம்பேடு உதவி கமிஷனர் ரமேஷ்பாபு, இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கொலையான ராஜ்குமார் உடலை பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்து விசாரணை மேற்கொண்டனர்.

பழிக்குப்பழி

கடந்த ஆண்டு திருவேற்காட்டில் கஞ்சா விற்பதில் ஏற்பட்ட மோதலில் சண்முகம் என்பவரை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட ராஜ்குமார், கடந்த ஒரு மாதத்துக்கு முன்புதான் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்தார்.

சண்முகம் கொலைக்கு பழிக்குப்பழி வாங்கும் விதமாக அவருடைய நண்பர்கள், ராஜ்குமார் சிறையில் இருந்து வெளியே வரும்வரை காத்திருந்து, அவர் வெளியே வந்ததும் தீர்த்து கட்டியது தெரிந்தது.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக திருவேற்காட்டை சேர்ந்த குமார் (52), அவருடைய மகன் லால் என்ற பிரகாஷ் (29), நாகராஜ் (44), ராகுல் (19), சுந்தர் (21) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.


Next Story