படகுகள் சேதம் அடைவதை தடுக்க மண்டபம் கடலில் ரூ.100 கோடியில் கட்டப்படும் தூண்டில் வளைவுகள்


படகுகள் சேதம் அடைவதை தடுக்க மண்டபம் கடலில்ரூ.100 கோடியில் தூண்டில் வளைவுகள் கட்டப்பட்டு வருகின்றன. அவற்றின் மீது பிரத்தியேக அலங்கார கற்களும் அமைக்கப்படுகின்றன,

ராமநாதபுரம்

பனைக்குளம்

படகுகள் சேதம் அடைவதை தடுக்க மண்டபம் கடலில்ரூ.100 கோடியில் தூண்டில் வளைவுகள் கட்டப்பட்டு வருகின்றன. அவற்றின் மீது பிரத்தியேக அலங்கார கற்களும் அமைக்கப்படுகின்றன,

தூண்டில் வளைவு

ராமநாதபுரம் மாவட்டத்தில் விவசாயமும், மீன்பிடி தொழிலும்தான் பிரதானம்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேசுவரத்துக்கு அடுத்ததாக அதிக மீன்பிடி படகுகளை கொண்டது மண்டபம் கடல் பகுதியாகும்.

மண்டபத்தில் மட்டும் சுமார் 600-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், 400-க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள், சிறிய பைபர் படகுகள் மூலம் ஏராளமானோர் மீன்பிடித்து வருகின்றனர்.

கடல் சீற்றத்தால் படகுகள் சேதம்

ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழை சீசனில் இயற்கையாகவே மண்டபம் கடல் பகுதி சீற்றமாகவே காணப்படும். அதுபோல் வங்கக்கடலில் புயல் சின்னம் உருவானாலும் மண்டபத்தில் பலத்த காற்று வீசுவதோடு, கடல் சீற்றமும் இருக்கும்.

அதுபோன்ற நாட்களில் அடிக்கடி மீன்பிடி படகுகள் சேதமடைந்து கரை ஒதுங்கும் நிகழ்வுகளும் நடைபெற்று வருகின்றன.

இதை தடுக்க மண்டபம் கடல் பகுதியில் தூண்டில் வளைவு கட்ட வேண்டும் என்று மீனவர்கள் தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். மண்டபம் வடக்கு கடல் பகுதியில் ரூ.30 கோடி நிதியில் சுமார் ஒரு கி.மீட்டர் தூரத்துக்கு கடலுக்குள் கற்களை கொட்டி குவித்து, தூண்டில் வளைவு கட்டும் பணியானது வேகமாக நடைபெற்று வருகிறது. இதன் அருகிலேயே ரூ.20 கோடியில் மீன்பிடி இறங்கு தளமும், மீன் ஏலக்கூட கட்டிடமும் கட்டப்பட்டு வருகின்றன.

மண்டபம் தெற்கு கடல் பகுதியிலும்ரூ.50 கோடியில் 910 மீட்டர் நீளத்தில் கடலுக்குள் கற்களை கொட்டி அங்கும் தூண்டில் வளைவு கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

அதிகாரி விளக்கம்

இதுகுறித்து மீன்வளத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

வடகிழக்கு பருவமழை சீசனில் மீனவர்களின் படகுகளை பாதுகாப்பாக நிறுத்த வசதியாகவும், கடல் அலையின் வேகத்தை கட்டுப்படுத்தி மீன்பிடி படகுகளை காப்பதற்காக நபார்டு திட்டத்தின் கீழ் மண்டபம் தெற்கு மற்றும் வடக்கு துறைமுக கடல் பகுதியில் ரூ.100 கோடி நிதியில் தூண்டில் வளைவுகள் கட்டும் பணியானது, ஒரு ஆண்டுக்கு மேலாகவே நடைபெற்று வருகிறது. இதை தவிர்த்து வடக்கு மற்றும் தெற்கு துறைமுக கடல் பகுதியில் புதிதாக இரண்டு மீன்பிடி இறங்கு தளங்கள், மீன்கள் ஏலக்கூடம் கட்டப்பட்டு வருகின்றன. இந்த பணிகள் அனைத்தும் முடியும் தருவாயில் உள்ளன.

அலங்கார கற்கள்

இந்த தூண்டில் வளைவுகள் மீது4 முனை, 3 முனை கொண்ட பிரத்தியேக அலங்கார தடுப்பு கற்கள் போடப்பட்டு தடுப்புச்சுவரும் கடலுக்குள் கட்டப்பட உள்ளது. அந்த கற்களும் தயார் செய்து கடற்கரையில் கொண்டு இறக்கி வைக்கப்பட்டுள்ளன. விரைவில் இந்த பணிகள் தொடங்கப்பட உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story