வடகாட்டில் வழுக்கு மரம் ஏறும் போட்டி
வடகாட்டில் வழுக்கு மரம் ஏறும் போட்டி நடைபெற்றது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வடகாடு, மாங்காடு ஏ.வி. பேரவை சார்பில், வடகாட்டில் வழுக்கு மரம் ஏறும் போட்டி நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை, நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 9 அணிகள் கலந்து கொண்டன. தொடக்கத்தில் ஒவ்வொரு அணியில் இருந்தும் ஒருவர் பின் ஒருவராக 3 பேர் வீதம் வழுக்கு மரத்தில் ஏறுவதற்கு அனுமதிக்கப்பட்டனர். ஆனால், இலக்கை யாரும் தொடாததால் வீரர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வந்தது. ஒரு கட்டத்தில் 7 பேர் வீதம் ஏறுவதற்கு அனுமதிக்கப்பட்ட நிலையில், பனங்குளம் கிங்க் பிஷர் அணியினர் 47 அடி உயரமுள்ள மரத்தின் உச்சி வரை லாவகமாக ஏறி வெற்றி பெற்றனர். இதுவரை நடைபெற்ற போட்டிகளில் இல்லாத அளவிற்கு, அதிக உயரமுள்ள மரத்தில் குறைந்த எண்ணிக்கையிலான வீரர்கள் ஏறி இந்த சாதனையை நிகழ்த்தியிருப்பதாக விழாக்குழுவினர் தெரிவித்தனர். வெற்றி பெற்ற அணியினருக்கு ரூ.15 ஆயிரம் மற்றும் வெற்றி கோப்பை, சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட்டன. மேலும், கலந்து கொண்ட அனைத்து அணியினருக்கும் ஆறுதல் பரிசுகள் வழங்கப்பட்டது. சுமார் 5 மணி நேரம் விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியை சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளானோர் கலந்து கொண்டு பார்த்து ரசித்தனர்.