முத்துமாரியம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம்


கீரமங்கலம் முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி பால்குட ஊர்வலம் நடைபெற்றது. தேரோட்டம் நாளை (திங்கட்கிழமை) நடக்கிறது.

புதுக்கோட்டை

முத்துமாரியம்மன் கோவில்

கீரமங்கலத்தில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் ஆடி திருவிழாவையொட்டி கடந்த 16-ந் தேதி பூச்சொரிதல் நிகழ்ச்சி நடந்தது. அதனைத் தொடர்ந்து கிராமங்களில் உள்ள காவல் தெய்வங்களுக்கு பொங்கல் வைத்து படையலிட்ட நிலையில் கடந்த 23-ந் தேதி இரவு காப்புக்கட்டுதலுடன் ஆடி பெருந்திருவிழா தொடங்கியது.

இதனைத்தொடர்ந்து ஒவ்வொரு நாளும் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் இரவில் வீதியுலா வந்தார். அப்போது வாண வேடிக்கை மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

பால்குட ஊர்வலம்

இந்தநிலையில் நேற்று காலை டிரம்ஸ் இசைக்கலைஞர்களின் இசையோடு 5 நாட்டிய குதிரைகளின் ஆட்டத்துடன் 100-க்கணக்கான பக்தர்கள் ஊர்வலமாக பால்குடம், வேல்காவடி தூக்கி சென்று நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) பொங்கல் விழாவும், நாளை (திங்கட்கிழமை) மாலை தேரோட்டமும் நடக்கிறது. விழாவைகாண சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்த கொள்வார்கள் என்பதால் கீரமங்கலம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். விழாவுக்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

சத்தியமூர்த்தி பெருமாள்

திருமயம் சத்தியமூர்த்தி பெருமாள் கோவிலில் ஆடிப்பூர பிரம்மோற்சவத்தையொட்டி பெருமாளுக்கு ஒவ்வொரு நாளும் அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. நேற்று 8-வது நாள் திருவிழா மண்டகப்படிதாரர் சார்பில் நடைபெற்றது. இதில் சத்தியமூர்த்தி பெருமாள் குதிரை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பின்னர் மேளதாளங்கள் முழங்க வாண வேடிக்கையுடன் குதிரை வாகனத்தில் வீதியுலா வந்தார். நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

புரவி எடுப்பு திருவிழா

திருவரங்குளம் அருகே உள்ள பூவரசங்குடி அய்யனார் கோவிலில் புரவி எடுப்பு திருவிழா நடைபெற்றது. இதையொட்டி பக்தர்கள் விரதமிருந்து குதிரை சிலைகளை சுமந்துக்கொண்டு தாரை, தப்பட்டை, வாண வேடிக்கையுடன் ஊர்வலமாக சென்று கோவிலில் வைத்து தரிசனம் செய்தனர். பின்னர் கிடாவெட்டி பூஜை செய்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

திருவரங்குளம் சமயபுரம் மாரியம்மன் கோவில் செல்லும் பாதயாத்திரை குழுவினர் தேரடி கருப்பர் கோவில் அருேக உள்ள கருப்பையா சுவாமிகள் மண்டபத்தில் சமயபுரம் மாரியம்மனை எழுந்தருள செய்து பொங்கல், சுண்டல், பழங்கள், சிறுதானிய கூழை மாரியம்மனுக்கு படையலிட்டு வழிபட்டனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

பால தண்டாயுதபாணி சுவாமி

திருமயம் அருகே உள்ள அம்மணிப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள பால தண்டாயுதபாணி சுவாமிக்கு பால், தயிர், இளநீர், மஞ்சள், சந்தனம், பன்னீர் உள்பட பல்வேறு வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பால்குடம் எடுத்தும், குழந்தைகளுக்கு தொட்டில் கட்டியும் தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றினர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

குத்துவிளக்கு பூஜை

பொன்னமராவதி பொன்.வையாபுரிப்பட்டி சாவக்கார கருப்பையா சுவாமி-வளத்தி அம்மன் கோவிலில் ஆடிப்படையல் விழா மற்றும் குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் 51 பெண்கள் கலந்து கொண்டு கோவில் வளாகத்தில் குத்து விளக்கேற்றி வழிபாடு செய்தனர். முன்னதாக சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

அரிமளம் மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் மற்றும் பல்வேறு ஹோமங்கள் நடைபெற்றன. அதன்பின்னர் உலக அமைதிக்காகவும், நல்ல மழை பெய்ய வேண்டியும் பெண்கள் குத்துவிளக்கு ஏற்றி வழிபாடு நடத்தினர். காரையூர் முத்துமாரியம்மன் கோவிலில் 501 பெண்கள் விரதம் இருந்து குத்துவிளக்கு பூஜை செய்தனர். இதேபோல் வடகாடு அருகேயுள்ள கீழாத்தூர் நாடியம்மன் கோவிலில் திரளான பக்தர்கள் தீபம் ஏற்றி வழிபாடு நடத்தினர்.


Next Story