பல்லடம் படுகொலை - முதல் தகவல் அறிக்கையில் பரபரப்பு தகவல்கள்


பல்லடம் படுகொலை - முதல் தகவல் அறிக்கையில் பரபரப்பு தகவல்கள்
x
தினத்தந்தி 4 Sept 2023 5:32 PM IST (Updated: 4 Sept 2023 5:47 PM IST)
t-max-icont-min-icon

பல்லடம் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், இந்தக் கொலைக்கு முன்விரோதம் காரணம் என முதல் தகவல் அறிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது.

திருப்பூர்,

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகேஉள்ள கள்ளக்கிணறு குறை தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம் என்பவரின் மகன் செந்தில்குமார் (வயது 47). இவர் பருத்திக்கொட்டை வியாபாரம் செய்து வந்தார். இவருடைய சித்தப்பா பழனிசாமியின் மகன் மோகன்ராஜ் (45). இவரது தாயார் புஷ்பவதி. இவருடைய அக்காள் ரத்தினாம்பாள். இவர்கள் கள்ளக்கிணறு பகுதியில் அடுத்தடுத்து வசித்து வந்தனர்.

நேற்று இரவு 7 மணிக்கு வீட்டில் செந்தில்குமார் தனியாக இருந்தார். அப்போது ஒரு கும்பல் அரிவாள், கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களுடன் வந்தது. அந்த கும்பல் திடீரென்று செந்தில்குமாைர சரமாரியாக வெட்டியது. இதனால் அய்யோ காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று செந்தில்குமார் அபயக்குரல் எழுப்பினார். அவருடய குரல் கேட்டு பதற்றத்துடன் மோகன் ராஜ் அங்கு ஓடிவந்தார். அப்போது ஒரு கும்பல் செந்தில்குமாரை வெட்டுவதை பார்த்து அவர் நெஞ்சம் பதைபதைத்தது. உடனே செந்தில்குமாரை காப்பற்ற மோகன்ராஜ் முயன்றார். அதற்குள் அந்த கும்பல் செந்தில்குமாரை வெட்டி வீழ்த்தியது. கொலையை தடுக்க முயன்ற மோகனைராஜையும் அந்த கும்பல் கொடூரமாக வெட்டியது. இதனால் மோகன்ராஜூம் அவர்களிடம் தப்பிக்க கூக்குரல் எழுப்பியவாறு தப்பிக்க முயன்றார். ஆனால் அந்த கும்பல் அவரையும் வெட்டி சாய்த்தது.

இதற்கிடையில் மோகன்ராஜின் அபாயகுரல் கேட்டு அவருடைய தாயார் புஷ்பவதி, புஷ்பவதியின் அக்காள் ரத்தினாம்மாள் ஆகியோரும் அங்கு வந்தனர். அப்போதும் வெறி அடங்காத அந்த கும்பல் அவர்கள் இருவரையும் வெட்டியது. இதனால் அவர்களும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர். இவை அனைத்தும் சிறிது நேரத்தில் நடந்து விட்டது.

கொலையில் ஈடுபட்ட கும்பல் வெறி கொண்டு வெட்டி வீழ்த்தியதால் அந்த தெரு முழுவதும் கொலை செய்யப்பட்டவர்களின் கை, கால்கள் மற்றும் உடற்பாகங்கள் சிதறிக்கிடந்தன. அந்த தெருமுழுவதும் ரத்தம் ஆறாக ஓடியிருந்தது. இதனால் அந்த பகுதி முழுவதும் மரண ஓலம் கேட்டது.

இந்த கொடூர கொலை குறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாமிநாதன் மற்றும் பல்லடம் போலீசார் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் அங்கு கொலையாகி கிடந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்ல முயன்றனர். ஆனால் கொலையானவர்களின் உறவினர்கள் கொலை செய்யப்பட்டவர்களின் உடல்களை எடுக்க விடாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். முதலில் கொலையாளிகளை கைது செய்த பிறகு உடல்களை எடுக்க அனுமதிப்போம் என்று தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி 4 உடல்களை போலீசார் அங்கிருந்து அப்புற்படுத்தினர். இதற்கிடையில் ஒரு குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் காட்டுத்தீபோல் பரவியது. இதனால் நேரம் செல்ல செல்ல பொதுமக்கள் கூட்டம் கூடியது. மேலும் பற்றமும் அதிகரித்தது. இதையடுத்து அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இந்த கொலை தொடர்பாக திருச்சி மாவட்டம் மணப்பாறையைச் சேர்ந்த செல்லமுத்து என்பவரை காவல் துறையினர் அதிரடியாக கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த விவகாரத்தில் தொடர்புடைய இருவரை 5 தனிப்படை அமைத்து போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இந்தநிலையில் கொலைக்கு முன்விரோதமே காரணம் என முதல் தகவல் அறிக்கையில் தகவல் வெளியாகி உள்ளது.

கொலை செய்யப்பட்ட மோகன்ராஜ் பல்லடம் சாலையில் உணவகம் நடத்தி வந்திருக்கிறார். உணவகம் எதிரே வெங்கடேஷ் கோழிக்கடை நடத்தி வந்திருக்கிறார். உணவகத்தில் இருந்து சிலிண்டர், கோழிக் கூண்டுகளை வெங்கடேஷ் எடுத்துச் சென்றதால் முன்விரோதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. விசாரணையில் மேலும் பல தகவல்கள் வெளியாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே, இந்த விவகாரம் தொடர்பாக பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள். மதுவால் சட்டம்-ஒழுங்கு தொடர்ந்து சீர்கெட்டு வருவதாகக் குற்றம்சாட்டியிருக்கின்றனர்.


Next Story