புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து குவாரிகளுக்கும் தடை


புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து குவாரிகளுக்கும் தடை
x

சட்டவிரோத கனிம வள கடத்தல் வழக்கு தொடர்பாக புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து குவாரிகளுக்கும் தடை விதித்து மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளனர்.

மதுரை

சட்டவிரோத கனிம வள கடத்தல் வழக்கு தொடர்பாக புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து குவாரிகளுக்கும் தடை விதித்து மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளனர்.

வழக்கு

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த ஜகுபர் அலி மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்திருந்த பொதுநல மனுவில் கூறி இருப்பதாவது:-

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள லெம்பலக்குடி கிராமத்தில் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலங்களில் அந்த பகுதியை சேர்ந்த கணேசன் என்பவர் சில அரசு அதிகாரிகளின் துணையுடன் ஆக்கிரமிப்பு செய்து கல்குவாரி நடத்தி வருகிறார். இந்த பகுதியை சுற்றிலும் நீர்வரத்து பகுதிகள் உள்ளன. ஆனால் தற்போது அவை முற்றிலும் சேதம் அடைந்து விவசாயத்திற்கு பாய்ச்சும் தண்ணீர் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த குவாரியில் கற்களை வெட்ட வெடி வைத்து தகர்ப்பதற்காக அதிக அளவில் வெடிபொருள்கள் பயன்படுத்துவதால் சுற்றுச்சூழல் மாசுபடுவது மட்டுமல்லாமல் அருகில் குடியிருக்கும் பொதுமக்களுக்கு சுவாச பிரச்சினையும் ஏற்பட்டுள்ளது. எனவே அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து சட்டவிரோதமாக அரசுக்கு தெரியாமலும், அரசுக்கு வருவாய் இழப்பும் ஏற்படுத்தி வரும் இந்த கல்குவாரிக்கு தடை விதிக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்திருந்தார்.

அனைத்து கல்குவாரிகளுக்கும் தடை

இந்த மனு நீதிபதிகள் சுந்தர் மற்றும் பரத சக்கரவர்த்தி ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத்தரப்பில் ஏற்கனவே குவாரி குறித்து நடத்தப்பட்ட மாவட்ட கலெக்டரின் நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. விசாரணை முடிவில், புதுக்கோட்டை மாவட்டத்தில் கனிம வளங்கள் ஏறத்தாழ 70 ஆயிரம் லாரிகளில் எடுத்து செல்லப்பட்டுள்ளது.

குவாரி செயல்படுவதற்காக மாவட்ட நிர்வாக அனுமதி வழங்கும் போது அவர்கள் அனுமதி பெற்ற அளவுதான் கனிம வளங்கள் எடுக்கப்படுகிறதா? என எந்த ஆய்வும் செய்வதில்லை. அத்துடன் கனிமவளம் திருட்டு போவதை தடுக்க மாவட்ட அளவிலும், தாலுகா அளவிலும் அமைக்கப்பட்ட பறக்கும் படை என்ன செய்கிறது என நீதிபதிகள் கேள்வியெழுப்பினர். அதேபோல, சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் மீது கோர்ட்டு உத்தரவுப்படி குற்றவியல் நடவடிக்கை எடுத்து ஏன் பணி நீக்கம் செய்யக்கூடாது எனவும் கேள்வியெழுப்பினர். அதனை தொடர்ந்து, புதுக்கோட்டை மாவட்டத்தில் எந்த குவாரியும் செயல்படாமல் உடனடியாக நிறுத்தி வைக்க வேண்டும் என குவாரிகளின் செயல்பாட்டுக்கு தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், கனிம வள இயக்குனர், மாவட்ட கலெக்டர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் குவாரிகள் குறித்து ஆய்வு செய்து நிலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை 2 வாரத்துக்கு ஒத்தி வைத்தனர்.


Related Tags :
Next Story