மசினகுடி பகுதியில் வனச்சாலைகளை வணிக ரீதியாக பயன்படுத்த தடை வனத்துறையினர் நடவடிக்கை

மசினகுடி பகுதியில் வன சாலைகளை வணிக ரீதியாக பயன்படுத்த வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். இதனால் வாகன சவாரி தொழிலில் ஈடுபட்டுள்ள டிரைவர்கள் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
கூடலூர்
மசினகுடி பகுதியில் வன சாலைகளை வணிக ரீதியாக பயன்படுத்த வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். இதனால் வாகன சவாரி தொழிலில் ஈடுபட்டுள்ள டிரைவர்கள் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
சுற்றுலா சார்ந்த தொழில்கள்
கூடலூர் அருகே முதுமலை புலிகள் காப்பகம் உள்ளது. இங்கு சுற்றுலா பயணிகள் தினமும் வருகின்றனர். தொடர்ந்து கேரளா கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநில சுற்றுலா பயணிகள் மசினகுடி பகுதியில் உள்ள விடுதிகளில் தங்கி வாகன சவாரியும் மேற்கொள்கின்றனர். இதனால் மசினகுடி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் சுற்றுலாப் பயணிகளை எதிர்பார்த்து பல்வேறு வணிகங்கள் நடைபெற்று வருகிறது.
கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு வரை தொடர் மழையால் மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக மசினகுடிக்கு சுற்றுலா பயணிகள் வராததால் அனைத்து வணிகமும் பாதிக்கப்பட்டது. தற்போது ஆறறில் தண்ணீர் வரத்து அடியோடு குறைந்து விட்டது. இதைத்தொடர்ந்து சுற்றுலாப் பயணிகள் மரத் தொடங்கியுள்ளனர். இதனால் இயல்பு நிலை திரும்பி உள்ளது.
வனத்துறை தடை
இந்த நிலையில் முதுமலை புலிகள் காப்பகத்தின் வெளி மண்டல பகுதியான மசினகுடி, சிங்காரா, சீகூர் வனச்சரக பகுதியில் கிராம மக்கள் பயன்படுத்தும் சாலைகள் உள்ளது. இச்சாலைகளில் வாகன சவாரி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் வனப்பகுதியில் செல்லும் சாலைகளை வணிக ரீதியாக பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது. வழக்கம்போல் உள்ளூர் மக்கள் மட்டுமே பயன்படுத்தலாம் என வனத்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து துணை இயக்குனர் அருண்குமார் வாகன டிரைவர்களுக்கு அளித்த கடிதத்தில் கூறியுள்ளதாவது:-
வனப்பகுதியில் அமைந்துள்ள சாலைகள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு மட்டுமே உள்ளது. இச்சாலைகளில் சுற்றுலாப் பயணிகளை வணிக ரீதியாக அழைத்துச் சென்றால் வனவிலங்குகள் தாக்கும் அபாயம் உள்ளது. மேலும் சுற்றுலாப் பயணிகள் பாதிக்கப்படவும் வாய்ப்பு உள்ளது. இது தவிர தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள யானை வழித்தடங்களும் உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த உத்தரவால் வாகன சவாரி தொழிலில் ஈடுபட்டுள்ள டிரைவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.