பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு தடை: தமிழகம் முழுவது பலத்த போலீஸ் பாதுகாப்பு


பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு தடை: தமிழகம் முழுவது பலத்த போலீஸ் பாதுகாப்பு
x
தினத்தந்தி 28 Sep 2022 6:58 PM GMT (Updated: 28 Sep 2022 7:32 PM GMT)

நாடு முழுவதும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை விதித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.

சென்னை,

டெல்லியை மையமாக கொண்டு செயல்பட்டு வந்த பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு, நாட்டில் பயங்கரவாத செயல்களுக்கு நிதி உதவி அளித்து வருவதாக புகார் எழுந்தது. இதையடுத்து நாடு முழுவதும் இந்த அமைப்பு செயல்பட்டு வந்த இடங்களில் தேசிய புலனாய்வு முகமை, அமலாக்கத்துறை உள்ளிட்ட பல்வேறு விசாரணை அமைப்புகள் விசாரித்தன. இதற்கு அந்த அமைப்பை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில், நாடு முழுவதும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை விதித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்து உள்ளது. சட்டவிரோத செயல்பாடுகள் காரணமாக இந்த தடைவிதிக்கப்பட்டு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த தடை உடனடியாக அமலுக்கு வருகிறது என்றும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு மட்டுமின்றி, அதன் துணை அமைப்புகள் மற்றும் அதற்கு உதவும் அமைப்புகளுக்கும் மத்திய அரசு தடைவிதித்து உள்ளது.

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் தடுக்க நாடு முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். தமிழகத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, சென்னை, கோவை, நெல்லை, மதுரை, ராமநாதபுரம், வேலூர், விழுப்புரம், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் தடை எதிரொலியாக போராட்டங்கள், சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படாதவாறு முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் அதிகம் கூடும் முக்கிய இடங்களான பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள், கடைவீதிகள், மார்க்கெட்டுகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story