பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு தடை: வேலூர் மாவட்டத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிப்பு


பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு தடை: வேலூர் மாவட்டத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிப்பு
x
தினத்தந்தி 28 Sep 2022 6:45 PM GMT (Updated: 28 Sep 2022 6:45 PM GMT)

‘பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா’ அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதை அடுத்து வேலூர் மாவட்டத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

வேலூர்

வேலூர்

'பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா' அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதை அடுத்து வேலூர் மாவட்டத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

தடை

'பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா' என்ற அமைப்பின் அலுவலகங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை செய்தனர். இதைத்தொடர்ந்து வேலூர் மாவட்டத்தில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

அந்த அமைப்பு சட்ட விரோதமாக செயல்படுவதாக கூறி அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் உத்தரவின் பேரில் நேற்று முக்கிய இடங்களில் கூடுதலாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் சில சாலை சந்திப்புகளில் போலீசார் வாகன தணிக்கையிலும் ஈடுபட்டிருந்தனர். இதுதவிர மோட்டார்சைக்கிள்களில் ரோந்து பணியிலும் ஈடுபட்டனர்.

பாதுகாப்பு ஏற்பாடுகள்

மாவட்ட கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடி நகரில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிப்பு பணியை போலீசார் மேற்கொண்டனர். நேற்று காலையில் வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் இதுதொடர்பாக போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் ஆலோசனை நடத்தினார். போலீசார் பணிபுரியும் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அப்போது 'பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா' அமைப்பிற்கு தடை செய்யப்பட்டுள்ளதால் அதற்கு ஆதரவாக யாரும் செயல்படக்கூடாது. அவ்வாறு நடந்து கொள்பவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் கூறினார்.

மேலும் பா.ஜ.க., இந்து முன்னணி அமைப்பினை சேர்ந்த முக்கிய பிரமுகர்களுக்கும் பாதுகாப்பு நீட்டிக்கப்பட்டுள்ளது. சிறப்பு பிரிவில் பணியாற்றும் போலீசாரும் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முக்கிய கோவில்களிலும் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிப்பட்டுள்ளதாகவும் இந்த பாதுகாப்பு தொடர்ந்து மேற்கொள்ளப்படும் எனவும் போலீசார் தெரிவித்தனர்.


Next Story